புதுடெல்லி: ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் வழங்குவது பற்றி ஒவ்வொரு அரசும் பேசினாலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது என்று பாஜக கூறியுள்ளது.
பாஜகவின் 42-வது நிறுவன தினம் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிறுவன தினத்தையொட்டி பாஜக 15 நாட்களுக்கு சமூகநீதி இயக்கம் என்ற பெயரில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டுள்ளது. இந்த 15 நாட்களில் ஒவ்வொரு நாளும் மத்திய அரசின் ஒரு நலத்திட்டத்தை மக்களிடம் பாஜக விளக்கி வருகிறது.
சமூகநீதி பிரச்சார இயக்கத்தின் 2-ம் நாளான நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜக செய்தித் தொடர்பாளர் கே.கே.சர்மா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: மோடி அரசுக்கு முந்தைய 60 ஆண்டுகளில் கிராமப்புற ஏழைகளுக்காக 3.26 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் மோடி அரசாங்கத்தின் கடந்த 8 ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு 11 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. தற்போதைய அரசின் ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 35 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. நகர்ப்புற ஏழைகளுக்காகவும் பாஜக தலைமையிலான அரசு 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.
ஏழைகளுக்காக 4.03 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் மாநிலங்களின் கருத்தைத் தொடர்ந்து அது 2.95 கோடியாக மாற்றப்பட்டது. மேற்கு வங்க அரசு கூட்டாட்சி அமைப்புக்கு வெளியே பணியாற்ற விரும்புவதாகத் தெரிகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டுகிறது. மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் எண்ணிக்கை குறித்த விவரத்தை மத்திய அரசுக்கு திரிணமூல் அரசு வழங்கவில்லை.
அரசு கட்டித்தந்த வீடுகளுக்கான உரிமை பெண்களின் பெயரிலும் அல்லது அவர்களை உள்ளடக்கியும் தரப்பட்டுள்ளது. இது பெண்களை அதிகாரம் பெறச் செய்துள்ளது. ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் வழங்குவது பற்றி ஒவ்வொரு அரசும் பேசினாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள்
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஏழைகளுக்கு 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு ஏழைக்கும் முழுமையான வீடு வழங்குவதற்கான எங்கள் தீர்மானத்தில் முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இந்த வீடுகள் பெண்களுக்கு அதிகாரம் அளித்ததற்கான அடையாளமாக விளங்குகின்றன” என்று கூறியுள்ளார்.