மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். உத்தப்பா 15 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னிலும் வெளியேறினர்.
சென்னை அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 48 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 27 ரன்கள் எடுத்தார். டோனி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் நடராஜன், வாஷிங்டன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வில்லியம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சென்னைக்கு நெருக்கடி கொடுத்தனர்.
வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் ராகுல் திரிப்பாட்டி அதிரடி காட்டி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். சன்ரைசர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி இரு தோல்விகளுக்கு அடுத்து நடப்பு சீசனில் தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. நான்காவது போட்டியில் விளையாடிய சென்னை அணி தொடர்ந்து நான்காவது தோல்வியை பெற்றுள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்வியால், சென்னை அணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.