ஐ.நா: மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து, ரஷ்யாவை, ஐ.நா பொது சபை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் இந்தியா உட்பட 58 நாடுகள் விலகியிருந்தன.
மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக, ரஷ்யா கடந்த 2020ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகேயுள்ள புச்சா பகுதியில் பொதுமக்கள் சிலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவத்துக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வந்தது.
இந்நிலையில் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து, ரஷ்யாவை தற்காலிகமாக நீக்குவதற்கான தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபையில், உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன்,லத்தீன் அமெரிக்க நாடுகள் முன்மொழிந்தன. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.
ஆதரவாக 93, எதிராக 24 ஓட்டு..
தீர்மானத்துக்கு ஆதரவாக 93 ஓட்டுக்களும், எதிராக 24 ஓட்டுக்களும் பதிவாகின. இந்தியா உட்பட 58 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் விலகின. இதனால் தீர்மானம் ந்ிறைவேற்றப்பட்டு, மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டது.
இதற்கு முன், கடந்த 2011ம் ஆண்டு லிபியா தற்காலிகமாக நீக்கப்பட்டது. சட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஓட்டெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் சபையில் அவர்அளித்த விளக்கத்தில் கூறிய தாவது:
ஜனநாயக அரசியலமைப்பு கூறுவது போல், உரிய நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என இந்தியா உறுதியாக நம்புகிறது. இது ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் பொருந்தும். வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும், அமைதியின் பக்கம் இந்தியாநிற்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர் பாதிப்பு அந்த பிராந்தியத்தை தாண்டியும் உணரப்படுகிறது. உணவு மற்றும் எரிசக்தி பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ரஷ்யா-உக்ரைன் மோதல் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை அமைப்பு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருப்பதாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகள் கூறின.
3 வது முறையாக இந்தியா விலகல் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீது நடந்த வாக்கெடுப்பில் இந்தியா இது வரை 3 முறை பங்கேற்காமல் விலகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரில் மனித உரிமைகள் மற்றும் சர்வதே சட்ட விதிமுறை மீறல்கள் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என கடந்த மார்ச் 4ம் தேதி கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்கள் மீது நடந்த ஓட்டெப்புகளிலும் இந்தியா பங்கேற்காமல் விலகியிருந்தது. தற்போது, மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை தற்காலிகமாக நீக்கும் ஓட்டெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை. |