தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
வயிற்று பிழைப்புக்காக உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, துப்பாக்கியால் சுடுவது போன்ற அராஜக செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இலங்கையின் அட்டூழியத்தை தடுக்காமல் மத்திய மாநில அரசுகள் வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகின்றன. இதுபோன்ற சூழலில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் ஜாமினில் செல்ல தலா ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசை மத்திய அரசு கண்டிப்பதோடு, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம் என்பதால் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.