புதுடெல்லி: ‘தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் இலவச வாக்குறுதிகள், அரசியல் கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது,’ என உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.‘அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இதனால், மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்,’ என கூறி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கை தொடர்ந்தார். இதை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ, ஏதேனும் இலவச திட்டங்கள் சார்ந்த வாக்குறுதிகளை வழங்குவது, அரசியல் கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவு. இது ஊழல் நடைமுறையில் வராது என்று கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றமே தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, தேர்தல் அறிக்கை தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறையை கொண்டு வருவது அவசியமாக இருக்கிறது. மேலும், இத்தகைய இலவச அறிவிப்புகள் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்குமா என்பது குறித்து வாக்காளர்கள்தான் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக, வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும் போது எடுக்கக்கூடிய கொள்கை சார்ந்த முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிட்டு அதனை கட்டுப்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ அல்லது முழுமையாக தடை விதிக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது சட்டத்தை மீறிய செயலாகி விடும்,’ என தெரிவித்துள்ளது.