வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டொரோன்டோ-கனடாவில் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்லுாரிகளில், ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், கார்த்திக் வாசுதேவ், 21, என்ற மாணவர், டொரோன்டோவில் உள்ள செனேகா கல்லுாரியில் பயின்று வந்தார். அவர், 7ம் தேதி மாலை, செயின்ட் ஜேம்ஸ் டவுன் பகுதியில் உள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு சென்று உள்ளார்.
அப்போது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், கார்த்திக்கை சுட்டுவிட்டு தப்பினார். படுகாயமடைந்த கார்த்திக் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணையை துவங்கி உள்ள போலீசார், தாக்குதல் நடத்திய நபரை தேடும் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளனர்.
கார்த்திக்கின் உடலை, இந்தியாவுக்கு விரைந்து அனுப்பி வைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக, அங்குள்ள இந்திய துாதரகம் உறுதி அளித்துள்ளது.இதற்கிடையே, உயிரிழந்த கார்த்திக் வாசுதேவின் மறைவுக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
Advertisement