பெங்களூரு :
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்கள் பரஸ்பர தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். இந்தி நமது நாட்டின் தேசிய மொழி கிடையாது. அவ்வாறு அதை தேசிய மொழியாக்க நாங்கள் விடவும் மாட்டோம். பல மொழிகளை கொண்ட பன்முகத்தன்மை தான் நமது நாட்டின் சாரம் ஆகும். நாங்கள் இந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளத்தை எதிர்க்கவில்லை. ஆனால் கன்னடத்திற்கு முதல் இடம் வேண்டும். பிற மொழி பேசுபவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். ‘பன்முக தன்மை’நமது நாட்டை ஒற்றுமை பாதையில் அழைத்து செல்கிறது. இதை சிதைக்க பா.ஜனதா எந்த ரீதியில் முயற்சி செய்தாலும் அதை நாங்கள் வலுவாக எதிர்ப்போம். இந்தி மொழி திணிப்பை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்.
இந்தி மொழியை திணிப்பது என்பது வற்புறுத்தும் கூட்டாட்சி ஆகும். இது கூட்டாண்மை கூட்டாட்சி ஆகாது. நமது மொழிகள் குறித்த பா.ஜனதாவின் நோக்கம் குறுகிய பார்வையை கொண்டதாக உள்ளது. இதை அக்கட்சி சரிசெய்து கொள்ள வேண்டும். பா.ஜனதாவின் எண்ணங்கள் சாவர்க்கர் போன்ற போலி தேசியவாதிகளின் கருத்துகளில் இருந்து உருவானவை. இந்தி அல்லாத பிற மொழிகள் மீது பா.ஜனதா கலாசார பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், கர்நாடக ஏகிகரண் போராட்ட குழு தலைவர்கள் கர்நாடகத்தை வலுப்படுத்துவதில் பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட வேண்டும். பிற மொழிகள் மற்றும் கலாசார சுதந்திரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து போட்டி தேர்வுகளும் மாநில மொழிகளில் நடத்த வேண்டும். இந்தி திணிப்பை தவிர்க்க தேசிய கல்வி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து பெரிய மாநிலங்களின் மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்.
அமித்ஷா தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்தியை தூக்கி நிறுத்த சொந்த மொழியான குஜராத்திக்கு எதிராக செயல்படுவது அவமானகரமானது ஆகும். அவர் காந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்தவர். ஆனால் சாவர்க்கரை போல் நடந்து கொள்கிறார். மகாத்மா காந்தி, மொழி பன்முக தன்மையை வலியுறுத்தினார். ஆனால் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு நாட்டை பிளவுப்படுத்தி ஆட்சி செய்ய உதவும் வகையில் இந்தியை பயன்படுத்தினார்.
இந்தியை திணிக்க முயற்சி செய்தால் அது சரியாக இருக்காது என்ற வரலாறு தெளிவாக சொல்கிறது. கன்னட அடையாளத்தை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். கவிஞர் குவெம்பு கூறியது போல் கர்நாடகா, இந்தியாவின் மகள் என்பதை நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்….விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை – ஆஸ்கர் அமைப்பு அறிவிப்பு