சேலம்: சேலம் மாவட்டத்துக்கு வரும் 11-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகை புரியும் நிலையில், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும், 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், மாபெரும் சக்தியாக அவரது தோழியான சசிகலா வலம் வந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்த ஓபிஎஸ்-ஐ கவிழ்த்த சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியில் அமர வழிவகை ஏற்படுத்தி கொடுத்தார். முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். இந்த அரசியல் நிகழ்வுகளில் நிலைநிற்க முடியாமல் தனித்துவிடப்பட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவிக்க சென்றுவிட்டார்.
ஓபிஎஸ் ஆதரவுடன் இபிஎஸ் முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டு நான்கரை ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்தார். இதனிடையே, சிறையில் இருந்து விடுதலையாகி திரும்பிய சசிகலாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடியாது என ஓபிஎஸ்-இபிஎஸ் திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தற்போது, அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நிலையில், சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரத்தை போட்டுள்ளார். இதன்படி, அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பலரையும் தன்வசம் இழுக்க தேவையான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆன்மிகச் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு முக்கிய கோயில்களுக்குச் சென்று வழிபடுவதோடு, அங்குள்ள அரசியல் கட்சி மற்றும் அதிமுக நிர்வாகிகள், முக்கிய பொறுப்புகளில் உள்ள பிரமுகர்களை சந்தித்து பேசி வருகிறார். சசிகலா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் அதிமுக தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் பயணத்தை வரும் 11-ம் தேதி தொடங்கயிருக்கிறார். வரும் 11-ம் தேதி சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு வரும் சசிகலாவுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் அதிமுக பெயரில் உற்சாக வரவேற்பு அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக மேலதாளங்களும், தாரை தப்பட்டை, வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்புக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
சசிகலா வருகையை முன்னிட்டு, சேலம் மாநகரில் அவரை வரவேற்று முக்கிய இடங்களில் பெரிய அளவிலான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் சசிகலா தனது ஆதரவு வட்டத்தை விரிவாக்கும் செய்யும்விதமாக மேற்கொண்டுள்ள இப்பயணத்தால் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சசிகலாவை வரவேற்று ஒட்டியுள்ள போஸ்டரில் அதிமுகவை சேர்ந்த அவரின் ஆதரவாளர்கள் ‘தியாகத்தாயே… அதிசயமே… பலர் வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்த தியாகத் தாயே… தலைவியே’ என்று புகழ்ந்து போஸ்டர் அடித்துள்ளனர்.
சசிகலா ஆதரவாளர்கள் என வெளிப்படையாக பெயர் சொல்லும்படி சேலத்தில் இதுவரை யாரும் இல்லாத நிலையில், சசிகலாவின் ஆதரவாளரின் ஒருவரான கலைவாணி என்ற பெயரில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களில் உள்ள வரிகளும் வார்த்தைகளும் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய சசிகலா, தற்போது கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தால் அதிமுக உட்கட்சிக்குள் பூசல் உருவாகும் நிலை உருவாகியுள்ளது.
அதிமுகவை தன் வசப்படுத்தும் முயற்சியில் சசிகலா வியூகம் வகுத்துள்ளதை முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் உன்னிப்பாக கவனித்து, உட்கட்சியில் இருந்து எதிரணிக்கு வேலை பார்ப்பவர்களை கண்டறிந்து களையெடுக்கவும் தயாராகி வருகின்றனர்.