புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு செப்டம்பருக்குள் புதிய கட்சி தலைவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். இதற்கான அமைப்பு தேர்தல்களை முடிப்பதற்கான செயல்முறை புதிய உத்வேகத்தை பெற்றுள்ளது.
இதற்கான உறுப்பினர் சேர்க்கை தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந் தேதி வரை இந்த உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.
இந்த நிலையில் நேற்று வரை காங்கிரஸ் கட்சிக்கு டிஜிட்டல் மூலம் 2.15 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். டிஜிட்டல் மூலம் நடைபெறும் இந்த உறுப்பினர் சேர்க்கையை பிரவீன் சக்ரவர்த்தி தலைமையிலான டேட்டா அனலிஸ்ட் குழு மேற்பார்வையிட்டு வருகிறது.
5 மாநில தேர்தல் தோல்வி, அதிருப்தி தலைவர்கள் என பிரச்சினைகளில் சிக்கி இருக்கும் நிலையில் சுமார் 2.15 கோடி டிஜிட்டல் உறுப்பினர்களை காங்கிரஸ் சேர்த்துள்ளது.
புதிதாக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் சுமார் 59 சதவீதம் பேர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். அவர்களில் 42 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.
புதிதாக பதிவு செய்தவர்களில் 32 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர்கள். 21 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர், 12 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் மத சிறுபான்மையினர் 10 சதவீதம் பேர் ஆவார்கள்.
தேர்தல் காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை பணி நேற்றுதான் தொடங்கியது.
டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையின் உடனடி இலக்கு ஜூலை-ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து நிலைகளிலும் அமைப்பு தேர்தலை நடத்தி முடிப்பதாகும்.