'கால் பாய்' வேலையா? ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.17 லட்சத்தை ஏமாந்த இளைஞர்!

‘கால் பாய்’ வேலை வாங்கித் தருவதாக கூறியதால் மதிமயங்கிய இளைஞர் ஒருவர் ரூ.17 லட்சத்தை மர்ம நபர்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளார்.
இணையத்தில் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘கால் பாய்’ பணிக்கு ஆட்களை எடுப்பதாக கூறி பல போலி இணையதளங்கள் இயங்கி வருகின்றன. அதில், கால் பாயாக பணிபுரிவோருக்கு ஒரு மணிநேரத்துக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு ‘இண்டியன் எஸ்கார்ட் சர்வீஸ்’ என்ற பெயரில் செயல்படும் இணையதளமானது ‘கால் பாய்’ வேலைக்கு இளைஞர்கள் தேவை என்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
இதனை நம்பி மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர், அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்திருக்கிறார்.
image
மறுமுனையில் பேசிய நபர்கள், தங்கள் நிறுவனத்தில் சேர்ந்தால் ஒரு மணிநேரத்துக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் என்றும், வெளிநாடுகளுக்கும் செல்ல வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும், இந்தப் பணியில் சேர சில லட்சங்களை முன்பணமாக தர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதை கேட்டு மதிமயங்கிய அந்த இளைஞர், இறந்து போன தனது தந்தையின் வங்கி சேமிப்பில் இருந்து சிறிது சிறிதாக ரூ.17.26 லட்சத்தை அந்த மர்மநபர்களின் வங்கி எண்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் அந்த நபர்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டுவிட்டன.
image
இதனால் சந்தேகமடைந்த அந்த இளைஞர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். பின்னர் இதுகுறித்து தட்டாவாடி காவல் நிலையத்தில் அந்த இளைஞர் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், வங்கிக் கணக்கு எண்களை கொண்டு அந்த நபர்களை தேடி வருகின்றனர்.
உழைப்பதை விரும்பாமல் உடனடியாக பணக்காரராக வேண்டும் என்ற மனநிலையை கொண்ட இளைஞர்கள் இதுபோன்ற பல மோசடிகளில் சிக்கி வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.