பெங்களூரு : மைசூரு சாலையின், காளி ஆஞ்சனேயர் சுவாம்மி கோவிலில், திருவிழா, ரத உற்சவம் நடப்பதால், இன்று முதல் வரும் 12 வரை மைசூரு சாலையின், கிங்கோ ஜங்ஷனில் இருந்து, ஹொகுட்டதஹள்ளி ஜங்ஷன் வரை, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
வழக்கம் போன்று நடப்பாண்டும், மைசூரு சாலையின் காளி ஆஞ்சனேயர் சுவாமி கோவிலில், திருவிழா, ரத உற்சவம் நடக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 10 முதல் 12 வரை நடக்கும், ஸ்ரீராம வேணுகோபால சுவாமி ரத உற்சவத்தை காண, பக்தர்கள் குவிவர்.சுமூகமான போக்குவரத்துக்காக, மைசூரு — பெங்களூரு சாலையில், வாகன போக்குவரத்தில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சிர்சி சதுக்கம், மார்க்கெட் மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், ஹொசகுட்டதஹள்ளி ஜங்ஷனில், இடது புறமாக திரும்பி, டிம்பர் யார்டு லே — அவுட் வழியாக, முனீஸ்வரா பிளாக், 50 அடி சாலையில் சென்று, ஹொசகரேஹள்ளி சாலை வழியாக, வீரபத்ர ஜங்ஷன் வந்து, வெளிவட்ட சாலையை அடைந்து, மைசூரு சாலைக்கு செல்லலாம்.
மைசூரிலிருந்து வரும் வாகனங்கள், கிங்கோ ஜங்ஷனில், இடது புறம் திரும்பி, மேம்பாலத்தில் பயணித்து, பாபுஜி நகர் ஜங்ஷன் வழியாக, மைசூரு சாலைக்கு வந்து, பெங்களூருக்குள் செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றம், இன்று காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை இருக்கும். நாளை காலை 8:00 மணி முதல், மறுநாள் காலை 10:00 மணி வரை இருக்கும். இம்மூன்று நாட்களும், பெங்களூரு — மைசூரு சாலையில் வாகன போக்குவரத்துக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement