பயங்கரவாதிகளால் காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்டோர், ஜம்மு, டில்லி உட்பட நாட்டின் பிற பகுதிகளில் அகதிகள் போல் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், தற்போதுள்ள பா.ஜ., அரசும் பல உதவிகளை செய்துள்ளன. ஆனால், அவர்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, பயங்கரவாத அச்சத்திலிருந்து விடுவித்தால் தான், காஷ்மீரில் அவர்களை மீண்டும் முழுமையாக குடியமர்த்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜம்மு – காஷ்மீரில்1980களின் இறுதியில் பயங்கரவாதம் தலைதுாக்கியது. 1990களில், காஷ்மீரில் இருந்து, ஹிந்துக்கள், சீக்கியர்கள் பயங்கரவாதிகளால் வேட்டையாடப்பட்டு துரத்தப்பட்டனர். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
கண்காணிப்பு குழு
இதையடுத்து ஏராளமானோர் ஜம்மு, டில்லி மற்றும் நாட்டின் பிற நகரங்களில் தஞ்சம் அடைந்து அகதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபதில் வெளியான தி காஷ்மீர்பைல்ஸ் திரைப்படம், காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலத்தை இன்றைய தலைமுறையினர் அறிய உதவியுள்ளது.இதற்கிடையே, காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த சரியான விபரம் இல்லை.
எனினும், மறுகுடியமர்வு நிவாரண ஆணையத்தில், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 712 பேர்இருக்கும், 44 ஆயிரத்து 684 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 90 சதவீதம் ஹிந்து குடும்பங்கள்.ஆனால், இரண்டுலட்சத்து 50 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக, நார்வே அகதிகள் கவுன்சில்கண்காணிப்பு குழுதெரிவிக்கிறது. அதனால், அரசு புள்ளி விபரத்தை விட அதிகமானோர்காஷ்மீரில் இருந்து வெளியேறியது தெரிகிறது.
கடந்த 1990ல் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு தலா, 250 ரூபாய் உதவித் தொகையும், இலவச ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில்,நிவாரண தொகை உயர்த்தப்பட்டு, 2018 ஜூனில், ஒரு நபருக்கு 3,250 வீதம், ஒரு குடும்பத்திற்கு13 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.
கட்டமைப்பு வசதி
மத்திய அரசு, 1996ல் ஜம்முவில் தங்கியுள்ள காஷ்மீரி பண்டிட்களின் முகாம்களுக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக 6.6 கோடி ரூபாய் ஒதுக்கியது. அடுத்து, 1997ல் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டோரின் அசையா சொத்துக்களின் விற்பனையை தடுக்க சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, காஷ்மீர் பண்டிட்டுகளின் வீடுகளில் குடியேறியோருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.
கடந்த 2001ல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்தது. இதன்படி, காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோருக்கு நிவாரண தொகையாக, ஒரு குடும்பத்திற்கு, 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. வீடுகளை பழுது பார்க்க 3 லட்சம் ரூபாய்;வீட்டுப் பொருட்கள் வாங்க, 50 ஆயிரம் ரூபாய்; தனி நபருக்கு வட்டியின்றி 1-2 லட்சம் ரூபாய் கடன் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகள் கழித்து, காஷ்மீர் பண்டிட்டுகள் அவல நிலை குறித்து ஆராய, குழு அமைக்கப்படும் என வாஜ்பாய் அறிவித்தார். கடந்த, 2004ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ‘பிரதமர் மறுகட்டுமான திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்தார்.இதில், மறுகுடியமர்வு காஷ்மீரிகளுக்கு, ஜம்முவில் நான்கு இடங்களில் இரு அறைகள் உள்ள 5,248 குடியிருப்புகள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள், மின் வசதி, மருத்துவமனை, பொழுதுபோக்கு பூங்கா, கோவில் ஆகியவை அமைக்கப்பட்டன.
கடந்த, 2008ல் அறிவிக்கப்பட்ட மற்றொரு திட்டத்தின் கீழ், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டோருக்கு, வீடு கட்ட, வீடு வாங்க, வீடுகளை பழுது பார்க்க, மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க, 1,618 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அரசு வேலை
காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோரில், 3,000 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015ல் கூடுதலாக 3,000 பேருக்கு அரசு வேலை வழங்கியது. அத்துடன், அரசு பணி வழங்கப்பட்ட, 6,000 பேருக்கு, காஷ்மீரில் தங்கி பணியாற்ற வசதி செய்து தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் அடுத்த ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, வீடுகளை பழுது பார்க்க, 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோரின் குறைகளுக்கு தீர்வு காண, 2021ல் தனி வலைதளம் உருவாக்கப்பட்டது. கடந்த 2017 முதல் காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோரில், 610 பேருக்கு மீண்டும் அவர்களின் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டோரின் நலனுக்கு முந்தைய காங்., தற்போதைய பா.ஜ., அரசுகள் பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளன. எனினும் இன்னும் கூடுதலான உதவிகள் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோரை மீண்டும் அங்கு குடியமர்த்தினால் மட்டும் போதாது.அவர்களிடம் இனி பயங்கரவாத அச்சமின்றி அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்தையும் விதைப்பது முக்கியம். அப்போது தான், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
– நமது சிறப்பு நிருபர் –