பிரிட்டனில் பெரும் பாதிப்பை உருவாக்கி வரும் கொரோனாவின் புதிய வகை திரிபான ‘எக்ஸ் இ’ வைரஸால் குஜராத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அந்த நபரிடம் தீவிர பரிசோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஒமைக்ரான் வகை கொரோனாவால் ஏற்பட்ட மூன்றாம் அலை, இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்ததன் காரணமாக, தற்போது நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்கள் மாணவர்கள் வருகையுடன் முழுமையாக செயல்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன. அதேபோல, வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வந்த அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலகங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். வர்த்தகமும் சிறிது சிறிதாக சீரடைந்து, நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு மீட்சி பெறத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சீனா, பிரிட்டன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த வாரம் ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் அங்கு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், சீனாவில் பரவி வருவது எந்த வகை கொரோனா திரிபு என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
அதே சமயத்தில், பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகையான ‘எக்ஸ் இ’ வைரஸ் பரவி வருகிறது. ஒமைக்ரானின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரண்டு மாதிரிகளின் கலப்பு தான் இந்த ‘எக்ஸ் இ’ திரிபு என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒமைக்ரானை விட இது 10 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டவை எனவும் ஆராய்ச்சிகளில் தெரியவந்திருக்கிறது.
குஜராத்தில்…
இந்த சூழலில், வெளிநாட்டில் இருந்து குஜராத் வந்த நபர் ஒருவருக்கு கொரோனா ‘எஸ்க் இ’ வகை பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, மற்றொரு நபருக்கு ‘எக்ஸ் எம்’ வகை பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் கூற மறுக்கின்றனர்.
முன்னதாக, சென்ற வாரம் மும்பையில் ‘எக்ஸ் இ’ வகை கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், கடந்த வியாழக்கிழமை இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM