சென்னை: கூட்டுறவு சங்கங்களை கலைக்கமசோதா கொண்டு வரப்பட்டதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரின் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிதலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு சங்கம் தொடர்பாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்துஅதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புசெய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் ஆணையம், 2 முறை கூட்டுறவு அமைப்பு தேர்தலை நடத்தியது. இதில் வெற்றி பெற்று உறுப்பினர்கள், தலைவர்கள் தேர்வாகிநல்ல முறையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு அமைப்புகளை கலைப்பதற்காக சட்ட மசோதா கொண்டுவந்ததை கண்டிக்கிறோம். அத்துடன், கூட்டுறவு அமைப்புகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளாக குறைத்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு அமைப்பு தேர்தலை கலைக்க வேண்டும் என்ற நோக்கிலும், தங்கள் கட்சியினரை சங்கங்களில் இடம்பெறச் செய்யும் நோக்கிலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
பொங்கல் தொகுப்பில் ஊழல்
பொங்கல் தொகுப்பை பொருத்தவரை அனைத்து கடைகளிலும் 21பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. பொருட்களும் தரமாக இல்லை. வெல்லம் வேறு மாநிலத்தில் வாங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்காக, காலாவதியான, தரமற்ற வெல்லத்தை வாங்கி வைத்திருந்ததை சுட்டிக்காட்டினோம்.
ஆனால், உணவுத் துறை அமைச்சர் எங்கும் தவறு நடக்கவில்லை என்றுதவறான புள்ளிவிவரத்தை அவையில் அளிக்கிறார். பொங்கல் தொகுப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. பொங்கல் தொகுப்பில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளதை கண்டிக்கிறோம்.
சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச போதிய நேரம் ஒதுக்குவது இல்லை. உறுப்பினர்களின் நேரத்தை அமைச்சர்கள் எடுத்துக்கொண்டு, உறுப்பினர்கள் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறது. இதையும் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.