முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. கேரள மாநிலத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி, குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியாறு, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 3 மணி நேரம் தொடர் கனமழை பெய்தது.
இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முல்லை பெரியாறு அணைக்கு வினாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கன மழைக்காண மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனைப்போல தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும் மண்ணை குளிர்விக்கும் வகையில் மழை பெய்தது. நெல்லை, தேனி, திண்டுக்கல், மதுரை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM