கோத்தபய, மகிந்த, நமல்… இலங்கை மக்களின் பஞ்சத்துக்கு வித்திட்ட ராஜபக்சே குடும்பப் பின்னணி

1948-ம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது இலங்கை. சுதந்திரத்துக்குப் பின்னர் அந்த நாடு, தற்போதுதான் மிக மோசமான நிலையைச் சந்தித்துவருகிறது. இலங்கை மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது இலங்கை. அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு எனத் திண்டாடி வருகிறார்கள் இலங்கை மக்கள்.

இலங்கை

கடந்த 2019 தேர்தலில், சிங்கள மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது ராஜபக்சே குடும்பத்தின் இலங்கை பொதுசன முன்னணி கட்சி. ஈழப் போர் வெற்றிதான் இலங்கை பொதுசன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய இடம்பிடித்தது. 2019 தேர்தலுக்கு முன்பாக ஈஸ்டர் திருநாளில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. அதையும் பிரசாரத்தில் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சேவின் கட்சியினர், “இலங்கையில் இரும்பு மனிதர்களான ராஜபக்சேக்கள் ஆட்சியிலிருந்திருந்தால் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளே நிகழ்ந்திருக்காது. நம் நாடு பாதுகாப்பாக இருக்க ராஜபக்சேக்களுக்கு வாக்களியுங்கள்” என்றனர். இந்தப் பிரசாரங்களின் பலனாகச் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றிபெற்றனர் ராஜபக்சே சகோதரர்கள். ஆனால், தற்போது ராஜபக்சே சகோதரர்களைப் பெரிதும் ஆதரித்த சிங்கள மக்களே, அவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். `ராஜபக்சே சகோதரர்களை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்’ என்று போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

`இலங்கையின் வீழ்ச்சியில் ராஜபக்சே குடும்பத்தின் பங்கு என்ன?’ என்பதை அடுத்தடுத்த பத்திகளில் அலசுவோம்!

மகிந்த ராஜபக்சே

தற்போது பிரதமராக இருக்கும் மகிந்த ராஜபக்சே 2004-05 காலகட்டத்திலும் இலங்கையின் பிரதமராக இருந்தவர். 2005 முதல் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு இலங்கையின் அதிபராகவும் செயல்பட்டார் மகிந்த. 2009 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தது மகிந்த ராஜபக்சே அரசு. ஈழப் போருக்குப் பின்னர், மகிந்த ராஜபக்சே தனது சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையில் துறைமுகமும், விமான நிலையமும் அமைக்க அடிக்கல் நாட்டினார். கொழும்பிலுள்ள துறைமுகம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் நிலையில் புதிதாகத் துறைமுகம் அமைத்தால் நாட்டுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதனால் இலங்கையின் இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடனுதவி வழங்க மறுத்தன.

மகிந்த ராஜபக்சே

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு துறைமுகம் அமைப்பதற்கான மொத்த செலவில், 85 சதவிகிதத்தைக் கடனாக வழங்கியது சீனா. தொடர்ந்து 2014-ல் கொழும்பில் மிகப்பெரிய பொருளாதார நகரம் அமைக்கும் ஒப்பந்தத்தில் அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கையெழுத்திட்டனர். இந்த இரண்டு விஷயங்களுக்காகச் சீனாவிடம், இலங்கை பெற்ற கடனும், அந்த நாட்டுடன் போட்ட ஒப்பந்தங்களும்தான் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஆரம்பப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்காகச் சீனாவிடம் பெற்ற கடன் தொகையில், பெருமளவு பணத்தை ஊழல் செய்து ராஜபக்சே குடும்பமே எடுத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

கோத்தபய ராஜபக்சே

மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபய, 2019 தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் அதிபரானார். அதிபர் பொறுப்பேற்றவுடன், நாட்டின் நிதிப் பற்றாக்குறைகளைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வரிவிதிப்புகளிலும் சலுகைகளை அறிவித்தார் கோத்தபய. பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் மீறி வரிச் சலுகைகளை அறிவித்ததால்தான், நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கோத்தபய ராஜபக்சே

அதுமட்டுமல்லாமல் இலங்கையின் பட்ஜெட் அறிவிப்புகளிலும் பல்வேறு சொதப்பல்களைச் செய்திருக்கிறது கோத்தபய அரசு. `தி டெர்மினேட்டர்’, `இலங்கையின் இரும்பு மனிதர்’ என்று கோத்தபயவுக்கு அவரது கட்சியினர் பில்ட்-அப் கொடுத்துவந்தனர். கோத்தப்பய அரசின் கீழ் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்ற பிம்பத்தையும் உருவாக்கினர். இதன் காரணமாக, பட்ஜெட்டில் பெருந்தொகையை நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கினார் கோத்தபய. தேவையற்ற பாதுகாப்பு சாதனைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை மேலும் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டுகிறார்கள் இலங்கையின் பொருளாதார நிபுணர்கள்.

பசில் ராஜபக்சே

மகிந்த, கோத்தப்பய இருவருக்கும் இளையவரான பசில் ராஜபக்சே, இலங்கையின் நிதியமைச்சராக இருந்துவந்தார். `Mr. 10 Percent’ என்பதுதான் இவருக்கு எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் பெயர். அரசு எந்த ஒப்பந்தம் மேற்கொண்டாலும், அதில் 10 சதவிகிதம் கமிஷன் வாங்காமல் கையெழுத்துப் போடமாட்டாராம் பசில். இவர், இலங்கையின் முக்கியத் திட்டங்களில் அனைத்திலும் ஊழல் செய்து கோடிக் கணக்கில் பணம் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை பொதுசன முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எக்கச்சக்க மோசடி வழக்குகளில் சிக்கியிருந்தார் பசில். ஆனால், கோத்தப்பய அதிபரான பிறகு, பசில் மீதான அத்தனை வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

சமல் – பசில்

சமல் ராஜபக்சே

ராஜபக்சே குடும்பத்தின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சே, கோத்தபய அரசில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பணியாற்றிவந்தார். முன்னதாக இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியிலும் இருந்திருக்கிறார். சமல், இலங்கை பொதுசன முன்னணி கட்சிக்குள் கோத்தபய, மகிந்த அளவுக்கு செல்வாக்குமிக்கவராக இல்லையென்றாலும், ஆட்சிக்கு வந்துவிட்டால் எதாவது ஒரு பதவியைப் பெற்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். “சமல் ராஜபக்சேவை பொறுத்தவரைப் பதவி மட்டுமே பிரதானம். மக்களுக்காக எதையுமே அவர் செய்ததில்லை. ஊழலில் ஈடுபட்டு பணம் சேர்ப்பதும் பதவிகளைத் தக்கவைப்பதுமே அவருக்கு முக்கியம்” என்று இலங்கை ஊடகங்கள் சில சமல் மீது குற்றம்சாட்டுகின்றன.

நமல் ராஜபக்சே

மகிந்தவின் மூத்த மகன்தான் நமல் ராஜபக்சே. கடந்த வாரம் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்யும் வரை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தார் நமல். 24 வயதிலேயே எம்.பி-யாக இலங்கை நாடாளுமன்றத்தில் காலடியெடுத்து வைத்தார் நமல். எம்.பி-யாக இருந்தபோதே ஊழல், ஹவாலா மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். கோத்தபய, மகிந்த ஆகிய இருவருக்கும் அடுத்து கட்சிக்குள் செல்வாக்குமிக்கவராக வலம்வந்தார் நமல். பல்வேறு பணமோசடிகளில் ஈடுபட்டிருப்பதால், நமல் ராஜபக்சேவை `Money Laundering Specialist’ என்றே அழைக்கிறார்கள் இலங்கை மக்கள்.

நமல் ராஜபக்சே

ஆக மொத்தத்தில், ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களின் வரலாற்றை எடுத்துப் பார்க்கையில், அவர்கள் யாருமே இலங்கையின் வளர்ச்சிக்காகவோ, மக்களின் நலனுக்காகவோ பாடுபடவில்லை என்பது தான் குற்றச்சாட்டு. தங்களது சுயலாபத்துக்காக இலங்கையின் வளங்களைச் சுரண்டி, தற்போது அந்த நாட்டை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.