பனாஜி: பாலிவுட் நடிகை ஆயிஷா தாகியா மற்றும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அபு ஆஸ்மியின் மகனான அவரது கணவர் பர்ஹான் ஆஸ்மி ஆகியோர் தங்களது மகனுடன் கோவா சென்றிருந்தனர். பின்னர் கோவா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மும்பைக்கு திரும்பினர். கோவா விமான நிலையம் வந்த அவர்களை, அங்கிருந்த இரண்டு மூத்த பாதுகாப்பு பணியாளர்கள் பாலியல் மற்றும் இனவெறி கருத்துகளைக் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகையின் கணவர் பர்ஹான் ஆஸ்மி தனது டிவிட்டர் பதிவில், ‘கோவா விமான நிலையத்தில் நானும், என் மனைவியும், மகனும் வரிசையில் நின்றோம். அப்போது அங்கு வந்த மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், எனது மகனையும், மனைவியையும் வேறு வரிசையில் நிற்கச் சொன்னார்கள். என்னையும், என் மனைவியையும் உடல் ரீதியாக தள்ள முயன்றனர். அப்போது எனக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் என்னையும் என் குடும்பத்தினரையும் வேண்டுமென்றே தனிமைப்படுத்தினர். மூத்த அதிகாரி ஒருவர் என்னைச் சோதனை செய்ய மற்றொரு காவலருக்கு உத்தரவிட்டார். அப்போது வெறும் ரூ.500 மட்டும் வைத்திருந்த எனது பைகளை சோதனையிட்டனர். பாலியல் தொடர்பான வார்த்தையால் திட்டினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன்பின்னர் கோவா விமான நிலையம் வெளியிட்ட பதிவில், ‘பயணத்தின் போது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.