”சமூக நீதி பேசுகின்ற படங்கள் இந்திய சினிமாவில் சமீபகாலங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படி சமூக நீதியை பேசுகிற படங்களை ஒரு திரைப்படவிழாவில் திரையிடவேண்டும் என்கிற நோக்கில் இந்த முயற்சியை துவங்கியிருக்கிறோம்.” என்று இயக்குநர் பா. ரஞ்சித் வானம் கலைத்திருவிழாவில் பேசியுள்ளார்.
‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிக்குப்பிறகு ‘விக்ரம் 61’ படத்தினை இயக்குகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். சமீபத்தில், அதிகாரபூர்வமாக இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. அதேபோல், அவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘குதிரைவால்’ தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைக் குவித்து வருகிறது. இந்த நிலையில், தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா மற்றும் பி.கே ரோசி திரைப்பட விழாவை சென்னையில் இன்று துவங்கியுள்ளார் பா.ரஞ்சித்.
சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் நான்கு படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், மராட்டி, தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழித்திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. இன்று இந்நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்,
“இந்திய சினிமாவில் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சினிமா படங்கள் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. சினிமாவில் பயன்படுத்தப்படும் மொழியும், வாழ்வியலும், ஆவணமாகின்றன. கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் அடுத்த தலைமுறைக்கு எளிதாக கொண்டுசெல்லும் வலிமை சினிமாவுக்கு உண்டு. அப்படிப்பட்ட சினிமா இங்கு என்னவாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
பார்வையாளராக, படைப்பாளிகளாக நாம் அதை எவ்வாறு அணுகுகிறோம்? சமூகத்தில் பிரதிபலிப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது. நாம் சினிமாவை எப்படி அணுகவேண்டியதாயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சமூக அக்கறையோடு, சமூக நீதி பேசுகிற படங்கள் இந்திய சினிமாவில் சமீபகாலங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படி சமூக நீதியை பேசுகிற படங்களை ஒரு திரைப்படவிழாவில் திரையிடவேண்டும் என்கிற நோக்கில் இந்த முயற்சியை துவங்கியிருக்கிறோம். தொடர்ந்து சமூக நீதியை பேசுவோம்” என்றார்.
தலித் வரலாற்று மாத முதல் நிகழ்வாக பி.கே ரோசி பிலிம்பெஸ்டிவல் என்கிற பெயரில் துவங்கியுள்ள இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ பட இயக்குநர் அதியன், சமீபத்தில் கவனம் ஈர்த்த ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநர் ஃபராங்ளின் ஜேக்கப் உள்ளிரோட்டர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.