ஈரோடு மாவட்டம், திண்டல் அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், தக்க சமயத்தில் பேருந்தை இயக்கி பெரும் விபத்திலிருந்து பயணிகளையும், மற்ற சாலை வாகன ஓட்டிகளின் உயிரையும் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் – திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று, இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், திண்டல் அருகில் இந்த பேருந்து வந்து கொண்டிருந்த போது, பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அவர் தனது வலிப்புநோய் உடன் பேருந்தை சாலையில் இடதுபுறமாக தாறுமாறாக ஓட்டி சென்றார்.
இதனை பார்த்த சக பயணி ஒருவர், பேருந்தை இயக்கி விபத்து ஏற்படாத வண்ணம், சாலையின் நடுவே உள்ள சென்ட்ரல் மீடியனில் மோத செய்து, நடக்கவிருந்த பெரும் விபத்தை தடுத்து நிறுத்தினார்.
அந்த பயணி தக்க சமயத்தில் இதனை செய்ததால், சாலையில் பயணம் செய்த மற்ற வாகன ஓட்டிகளும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.
அந்த பயணி மட்டும் பேருந்தை தக்க சமயத்தில் சென்டர் மீடியனில் மோத வைத்து பேருந்தை நிறுத்த வில்லை என்றால், பெரும் விபத்து அரங்கேறி இருக்கும் என்று பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.
தக்க சமயத்தில் சமயோசிதமாக யோசித்து பெரும் விபத்தை தடுத்து நிறுத்தி அந்த பயணிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வலிப்பு நோய் ஏற்பட்ட பேருந்து ஓட்டுனரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.