திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில், கொத்தம்புள்ளி கதிர்நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம், சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன்.
அதன்படி 2009ம் ஆண்டுக்கு பிறகு திருப்பணி மேற்கொள்ளாத கொத்தம் புள்ளி கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் விரைவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்ய உள்ளேன். அங்கு கும்பாபிஷேகத்துக்கான தேதி இறுதி செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட உள்ளது.
ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் நடைபெற வேண்டும். அதற்காக இந்த ஆண்டு கோவில் பணிகளுக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து அதனை மீட்டு வருகிறோம். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சில இடங்களில் வாழ்வாதாரத்திற்கே இடமில்லாமல் தங்கி உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது, ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதனை மீட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 மாதங்களில் ரூ.2500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. சிறை வாசத்தில் இருந்த இறைவனுக்கே சுதந்திர காற்றை வழங்கியது தி.மு.க. அரசு தான். இது சமூக நீதியை பேணி காத்திடும் அரசு.
திண்டுக்கல் மலைக்கோட்டை மீது சிதிலம் அடைந்த சிலைகளை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தபோதும் அது தமிழகத்தில் இருப்பதால் வழிபாட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் தற்போது டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சிலைகளை பாதுகாப்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்.