சென்னை : சென்னை மாநகராட்சியின் கடன் ரூ.2,500 கோடி இருக்கலாம் என்று ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார். அம்மா உணவகம் திட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ககன் தீப் சிங் பேடி, “மாநகராட்சியின் கடன் ரூ.2,500 கோடி வரை இருக்கலாம்” என்று தெரிவித்தார். பட்ஜெட் குறித்து அவர் கூறியது: “அம்மா உணவகம் திட்டம் தொடரும் என சட்டமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, சென்னையில் அந்தத் திட்டம் தொடரும்.
சொத்து வரி கணிசமாக வசூலித்தும் மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறையே இருக்கிறது. மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, புனே போன்ற மற்ற மாநில பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்ட பிறகும் சொத்து வரி குறைவாகவே உள்ளது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை மாநகர எல்லைப் பகுதியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. எனவேதான் புறநகர் பகுதியைக் காட்டிலும், மாநகரப் பகுதியில் சொத்து வரி தற்போது கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அறிவியல்பூர்வமாக செலவு செய்ய வேண்டும். சென்னையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழகத்தின் பெருமைமிகு தலைநகராக சென்னை இருக்கிறது. எனவே, வளர்ச்சிப் பணிகள் தொடர்வது அவசியம்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு – மாதுரவாயல் சாலை , ஆலந்தூர், கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் காலனி, ஓட்டேரியில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. கணேசபுரம் மேம்பாலம், உஸ்மான் சாலைப் பகுதியிலும் மேம்பாலப் பணிகள் நடைபெறவுள்ளன.
சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஏற்கெனவே ரூ.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதியாக தமிழக அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது.சென்னை மாநகராட்சியின் கடன் தொகை ரூ.2,500 கோடி வரை இருக்கலாம்,
மக்கள் பிரதிநிதிகள் தேர்வாகிவிட்டதால், பட்ஜெட்டுக்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படவில்லை. முன்னர் அதிகாரிகள் மட்டுமே இருந்ததால் பொதுமக்கள் கருத்து கேட்டு பட்ஜெட் தயாரித்தோம். மாமன்ற உறுப்பினர்கள் கூறுவதை அதிகாரிகள் கேட்டு நடக்க வேண்டும். சில மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அது குறித்து கவனமாக பரிசீலிப்போம்” என்றார்.