சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப்பயிற்சி – முழுவிவரம்

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப் பயிற்சி, மற்றும் வீடு அற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை, 2022-23ஆம் நிதியாண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் வரி விதிப்பு மற்றும் நிதி குழுத் தலைவர்  சர்பஜெயா தாஸ் நரேந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில், மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாநகராட்சி பள்ளிகளில் மாணாக்கர்களின் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க பயிற்சி அளிக்கப்படும்.

மாணவிகளுக்கு நிர்பயா நிதி திட்டத்தின் மூலம் ரூ.23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.

சென்னையில் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணையதள இணைப்பு வழங்கப்படும்

சென்னை மாநகராட்சியில் வீடற்றவர்கள் தங்குவதற்கு புதிதாக 3 காப்பகங்கள் ரூ.2.40 கோடி மதிப்பில் அமைக்கப்படும் 

சொத்து வரியை பொதுமக்கள் எளிதாக செலுத்த QR குறியீடு வசதி அறிமுகம் செய்யப்படும்.

சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்,

சென்னையில் குளங்களை மேம்படுத்தும் பணி,ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ருட் 2.0 திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களான 1, 2, 3, 4, 6, 7, 11, 12, 14 மற்றும் 15-ல் தெரு விளக்கு பராமரிப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

ரிப்பன் கட்டிடம் மற்றும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தானியங்கி கருவி மூலம் சொத்து வரியினை செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். இதன் வாயிலாக பொதுமக்கள் தங்கள் சொத்து வரிக்கான காசோலைகளை மாநகராட்சி அலுவலர் உதவியின்றி தாங்களாகவே செலுத்தி கணினி ரசீதினை பெற்றுக் கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வணிக வாட்ஸ்அப் கணக்கு வாயிலாக ஏற்கனவே, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், சொத்து வரி நிலை அறிந்து பணம் செலுத்துதல், தொழில் வரி செலுத்துதல் மற்றும் கட்டிட திட்டம் சமர்ப்பிப்பதற்கான சேவைகள் நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுமக்களின் நலனுக்காக, தற்போதுள்ள சேவைகளுடன் கூடுதலாக பின்வரும் சேவைகள் வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் டிஜிட்டல் லாக்கர் வாயிலாக தரவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. அதன் தொடர்ச்சியாக வர்த்தகர்கள் டிஜி லாக்கர் அமைப்பில் இருந்து வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

அரசு செயல்பாட்டில் செயல்திறன், நிலைத்தன்மை மேம்படுத்தவும் மற்றும் கோப்புகள் கையாள்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் மின் அலுவல் அமைப்பு (இ-ஆபீஸ்) அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும்.

அனைத்து பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களும் மக்களின் குறைகளை உரிய நேரத்தில் நிவர்த்தி செய்யவும், அலுவலர்களின் தினசரி வருகையை குறிக்கவும், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு தெரிவு பலகை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வாயிலாக ஒரு புதிய பணியாளர் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். இச்செயலி வாயிலாக அதிகாரிகள் பொதுமக்களுக்கான சேவைகள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றனவா? என்பதை திறமையான முறையில் கண்காணிக்க இயலும்.

கடந்த 7 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் செயல்படாத காரணத்தினால் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் இருந்து எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இத்திட்டம் தொடர்ந்து நடைபெற ஏதுவாக 2022-2023 நிதியாண்டில் ரூ.2 கோடி மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்திற்காகவும் மற்றும் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கு ரூ.35 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கும் மொத்தம் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்திற் காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைமுறைப் பணிகள் மற்றும் நிர்வாக விவரங்கள் குறித்து உரிய துறையின் அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்படும்

இவ்வாறு பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு – வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்வு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.