சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2022-23 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மேயர் பிரியா ராஜன் இன்று (ஏப்.9) தாக்கல் செய்தார். மாநகராட்சிப் பள்ளிகளில் பாலின சமத்துவ குழுக்கள் அமைத்தல், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 119 தொடக்கப் பள்ளிகளும், 92 நடுநிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. சென்னை பள்ளிகளில் கல்வித்தரமும், தேர்ச்சியும், மாணவர் சேர்க்கையும் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் கீழ்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன: > பாலின சமத்துவத்தை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மாணவ, மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை விலயுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.
> 2022-23 ஆம் கல்வியாண்டில் 70 சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.186 கோடியில் இணைய இணைப்பு (Internet Connection)வழங்கப்படும்.
> 2022-23 ஆம் கல்வியாண்டில் 281 சென்னை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக ரூ.40 லட்சம் செலவில் கண்காட்சிகள் நடத்தப்படும்.
> 2022-23 ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 72,000 மாணவ மாணவியருக்கு ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
> இந்திய அரசாங்க நிதியில் செயல்படும் நிர்பயா திட்டத்தின் கீழ் தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள Apec Committee வாயிலாக 2022-23 ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு பின்வரும் நலத்திட்டங்கள் செய்யப்படவுள்ளது:
i.ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும்.
ii.ரூ.5.47 கோடியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.
iii.ரூ.6.91 கோடியில் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும்.
> 2022-23 ஆம் நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 31 பள்ளிகளுக்கு மாண்டிசேரி (Montessori) உபகரணங்களை சிறந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நடைமுறைப்படுத்துவதுடன், மேலும் இக்கல்வி முறை பிற மழலையர் வகுப்புகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
> தற்போது சிட்டீஸ் (CITIIS) திட்டத்தின் கீழ் School Management System (SMS), Learning Resource Repositary Management System (LRMS)ஆகியவற்றிற்கு ரூ.59 லட்சம் மற்றும் ரூ.2.45 கோடியில் School Leadership Development & Transformation (SLDT) பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மட்டைப்பந்து (Cricket) மற்றும் கால்பந்து (Football) விளையாட்டுகளில் தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.35 லட்சம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
> சிட்டீஸ் (CITIIS) திட்டத்தின் கீழ் 28 பள்ளிகளின் உள்கட்டமைப்பு ரூ.76.27 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியால் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும்.
> சென்னைப் பள்ளிகளில் குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்படும் பழுது, மின்சாதனங்களில் ஏற்படும் பழுது மற்றும் கழிவறைகளில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை மாணவர்களின் நலன்கருதி உடனடியாக சரி செய்து கொள்வதற்கு 119 சென்னை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.25,000 வீதமும், 92 சென்னை நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.30,000 வீதமும், 38 சென்னை உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.50,000 வீதமும் மற்றும் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.50,000 வீதமும் ஆக 281 தலைமையாசிரியர்களுக்கு ரூ.92.35 லட்சம் மிகாமல் செலவு மேற்கொள்வதற்கு அவசர செலவின நிதி (Imprest Amount) வழங்கப்படும்.
> சென்னைப் பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக் காத்து கல்வியை திறம்பட கற்றிட, திருவான்மியூரை சுற்றியுள்ள 23 சென்னைப் பள்ளிகளில் சுமார் 5,000 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் மூலம் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால், மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்களின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
> இளைஞர்கள் நாடாளுமன்ற குழு அமைத்தல்: சென்னைப் பள்ளி மாணவர்களிடையே மேடைப் பேச்சு, விவாதம், படைப்புத்திறன், சிந்தனை வளர்த்தல், குழுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைத்துவப் பண்பை வளர்க்கவும், சர்வதேச விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி ஐக்கிய நாடு குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்தவும், ஒழுக்கம், சகிப்புத்தன்மை, ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்கவும், பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில் இளைஞர்கள் பாராளுமன்ற குழு அமைக்கப்படும்.
> பள்ளி – இல்ல நூலகம்: சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், பொது அறிவினை வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை திறம்பட எதிர்கொள்வதற்கு ஏதுவாக பள்ளி நூலகங்களிலிருந்து புத்தகங்களை வீட்டிலும் பயன்படுத்த வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
> பேட்ஜ் வழங்குதல் மற்றும் குழுக்கள் அமைத்தல்: பள்ளியில் கற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேட்ஜ் வழங்கும் முறையும் மற்றும் ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து மாணவர்களிடையே (சிவப்பு, ஊதா, பச்சை மற்றும் மஞ்சள்) பொறுமை, தலைமை பண்பு, சரியான முடிவு எடுத்தல், சகிப்புத்தன்மை, குழுவாக பணி செய்தல் போன்ற பண்புகளை வளர்க்க வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
> 20 சென்னைப் பள்ளிகளில் ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே ஆங்கிலம் பேசும் திறனை வளர்ப்பதால் உயர்கல்வி , வேலைவாய்ப்பு மற்றும் உலகத்தின் எப்பகுதிக்கு சென்றாலும் எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக பல பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
> சென்னைப் பள்ளிகளில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள ஏதுவாக 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ.16.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.