கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து மசூதிகள் மூடப்பட்ட இருந்தன. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள பெரிய மசூதியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுமக்கள் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆயிரகக்ணக்கானோர் இந்த தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொழுகை கூட்டத்தில் நாட்டுக்கெதிராக சிலர் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு சிறிது நேரத்திற்குப் பரபரப்பு நிலவியது. பின்னர் இதுதொடர்பாக கோஷங்கள் எழுப்பிய 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஸ்ரீநகர் எஸ்எஸ்பி ராகேஷ் பல்வால், “தொழுகையின் முடிவில், கூட்டத்துக்குள் திடீரென தேசவிரோத கோஷங்கள் எழுந்தன. சிறிது நேரத்தில், இந்த கோஷங்கள் அதிகமாக பரவியது. இருப்பினும் கூட்டத்தில் பெரும்பாலானோர் ஒதுங்கியே இருந்தனர். அதைத்தொடர்ந்து, மசூதி நிர்வாகத்தினர் இதனைத் தடுக்க முயன்றபோது, இவர்களுக்கும் கோஷம் எழுப்பியவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே, மசூதி கமிட்டியினரால் இந்த மோதல் தடுத்த நிறுத்தப்பட்டது” என்று கூறினார்.
மேலும், தொழுகையில் கோஷங்கள் எழுப்பியதையடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும் ராகேஷ் பல்வால் கூறினார்.