புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டெல்லியில் தங்கியுள்ள தமிழக ஆளுநர் 2வது நாளான நேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துதல், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தேசிய கல்விக்கொள்கை 2020 ஆகியவை குறித்து தமிழக ஆளுநருடன் கலந்து ஆலோசித்ததாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.