தடுப்பூசிகளின் விலை அதிரடி குறைப்பு – தனியார் மருத்துவமனைகளும் ’பூஸ்டர்’ செலுத்த அனுமதி

நாடு முழுவதும் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் மையங்களில் 18-59 வயதுக்குட்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை கோவிட்-19 தடுப்பூசி டோஸ் வழங்குதல் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுடன் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், முதல் மற்றும் இரண்டாவது டோஸின் போது பயன்படுத்தப்பட்ட அதே தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸாகவும் வழங்கப்படவேண்டும் என்றார்.
அனைத்து பயனாளிகளும் ஏற்கனவே கோவின் தளத்தில் பதிவு செய்துள்ளதால், முன்னெச்சரிக்கை டோஸுக்காக புதிய பதிவுகள் எதுவும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தடுப்பூசிகளும் கோவின் தளத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இணைய முன்பதிவு மற்றும் நேரடியாக மையத்திற்கு சென்று தடுப்பூசி பெறுதல் ஆகிய இரண்டு வசதிகளும் தனியார் மையங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
image
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் முன்னர் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தனியார் தடுப்பூசி மையங்களை பராமரிக்க வேண்டும். தடுப்பூசியின் விலைக்கு மேல் ஒரு தடுப்பூசிக்கு அதிகபட்சமாக ரூ 150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள், அரசு தடுப்பூசி மையங்களில் இலவச தடுப்பூசி உட்பட, எந்த தடுப்பூசி மையத்திலும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை தொடர்ந்து பெற்று கொள்ளலாம்.12-க்கு அதிகமான வயதுடையவர்களுக்கு முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கலை விரைவுபடுத்தவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
image
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் கூடுதல் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை குறைத்துள்ளன. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு 600 ரூபாயாக விலையை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை 225 ஆக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா குறைத்துள்ளது. இதே போல் கோவாக்சின் மருந்தின் விலையையும் ஆயிரத்து 200-லிருந்து 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. இதனுடன் மருத்துவமனைகள் சேவைக்கட்டணமாக 150 ரூபாய் வசூலித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.