வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனத்தால் தென் தமிழகம், கோவை, திருப்பூர், நீலகிரி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 11 அன்று தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர், டெல்டா மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 12 அன்று தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும், ஏப்ரல் 13 அன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.