திருச்சி:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது;
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் நடக்கிறது.
திருச்சியில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்து நபரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செலுத்தி உள்ளனர். இந்த மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதுவரை 60 லட்சம் பேர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதில் 24 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 16.50 லட்சம் பேருக்கு நீரிழிவு வியாதியும் உள்ளது.
மேலும் 12.10 லட்சம் பேருக்கு நீரிழிவு உயர்ரத்த அழுத்தமும் சேர்ந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வியாதிகளுக்கு ஆட்பட்டு உள்ளனர்.
நிறைய பேருக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியவில்லை. இதனால் நாளடைவில் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உணவு பழக்கவழக்கங்களை மாற்றி நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தமிழகத்தில் 6640 பேர் சிறுநீரகத்திற்கும், 314 பேர் கல்லீரலுக்கும், 40 பேர் இதயத்துக்கும், 24 பேர் கைகளுக்கும், 28 பேர் நுரையீரளுக்கும் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.
கொரோனோ கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
தமிழகத்தில் 92 சதவீத அளவில் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசியால் தான் மூன்றாவது அலையில் இறப்பு இல்லாமல் இருந்தது. தமிழகத்தில் 1.37 கோடி பேர் இரண்டாவது தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.
44 லட்சம் பேர் முதல் தடுப்பூசிகளை கூட போடாமல் உள்ளனர்.பழங்குடியினர்கள் எல்லாம் கூட ஒத்துழைப்பு கொடுத்து செலுத்தி கொள்கின்றனர். ஆனால் படித்தவர்கள் தான் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.கொரோனா வைரஸ் ஒரு மாறுதலை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
இது வரை தமிழகத்தில் அது இஎக்ஸ் போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை. பிஏ2 ஒமிக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது.மரபியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் எடுத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.
தமிழகத்தில் முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு இன்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தொடர்பான அறிவிப்பு பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது டீன் வனிதா, கண்காணிப்பாளர் அருண்ராஜ் உடன் இருந்தனர்.