தி.மு.க.வையும், திரைத்துறையையும் ஒருபோதும் பிரித்து பார்க்க முடியாது- மு.க.ஸ்டாலின்

சென்னை:

சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தக்‌ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு:-

என்னை முதல்-அமைச்சர் என்று பார்க்காமல், உங்களில் ஒருவனாக என்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தைக்கூட நான் எழுதியிருக்கிறேன், “உங்களில் ஒருவன்” என்ற தலைப்பில், அதில் கூட நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். “தி.மு.க.வும் திரைத்துறையும் பிரிக்க முடியாதது. அதைப்போலவே, எங்கள் குடும்பமும் திரையுலகமும் கூட பிரிக்க முடியாததுதான். அப்பா கலைஞர் முதல் என்னுடைய மகன் உதயநிதி வரை தொட்டுத் தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது இந்தக் கலைப் பாரம்பரியம்!” என்று குறிப்பிட்டிருக்கிறேன். அந்த நட்புணர்வோடு தான் இங்கே நான் வந்திருக்கிறேன்.

திரையுலகம் பழைய நிலைமைக்குத் திரும்புவது மட்டுமல்ல, முன்னிலும் வேகமாகச் செயல்படுவதற்காகத் தான் இந்த மாநாடு. அதற்கு இந்த மாநாடு வழிவகை செய்யும் என்று நான் நம்புகிறேன். தென்னிந்தியாவில் இந்த மாநாடு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடக்கின்றது. சென்னையைத் தேர்ந்தெடுத்து இம்மாநாட்டை நடத்துவதற்காக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஊடகங்கள், திரைத்துறை ஆகிய அம்சங்கள் குறித்த மாநாடாக இதை நீங்கள் வடிவமைத்திருக்கிறீர்கள். பொழுதுபோக்குத் தன்மை கொண்டதாக இருந்தாலும், இது நாட்டில் இருக்கின்ற மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாக இது விளங்கிக் கொண்டு இருக்கிறது.

லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தொழிலை நம்பி தான் இருக்கிறார்கள். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகவும் இது அமைந்திருக்கிறது.

எனவே இதைப் பொழுதுபோக்கு என்று மட்டும் சுருக்கிச் சொல்ல முடியாது. எனவேதான், நீங்கள் இது தொடர்பான மாநாட்டைக் கூட்டி இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். அதிலும் குறிப்பாகச் சென்னை தான். அந்த வகையில், சென்னையில் இந்த மாநாடு நடப்பது மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

தென்னகத் திரைப்படத் துறையானது, இந்திய சினிமாவிற்கு முன்னோடியை பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்களிலும், சென்னை இன்றைக்கும் முன்னோடியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அவர்களின் தரத்தால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பையும், மதிப்பையும் பெற்றிருக்கிறார்கள்.

இதே போலத்தான் தமிழகச் செய்தி நிறுவனங்களும் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவையாக அமைந்திருக்கிறது. இன்று திரைத்துறையாக இருந்தாலும், செய்தி நிறுவனங்கள், மீடியாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கக் காரணம் மிக மிக நீண்ட வரலாறு நமக்கு இருப்பதால்தான்.

வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, நிதி வளர்ச்சி என்பதற்காக மட்டுமல்லாமல், மனவளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியாக உயர்ந்திருக்கிறது. அத்தகைய சிந்தனை வளர்ச்சிக்கும் சேர்த்துத் தீனி போடுவதாக, ஊடகங்கள் வளர வேண்டும். பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமல்லாமல், சிந்தனைக்கு தீனி போடுவதாக ஊடகங்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். திரையுலகம் தன்னை அனைத்து வகையிலும் புதுப்பிக்க வேண்டும்.

கதை, வசனம், இயக்கம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் இன்றைய சூழலுக்குத் தகுந்தமாதிரி மாறியாக வேண்டும். அப்படி மாறினால்தான் மனிதர்களின் பொழுதுபோக்குத் தளமாக திரையுலகம் தொடர்ந்து செயல்பட முடியும்.

திரையரங்குகள், இணையத் திரையரங்குகள், கணினித் திரையரங்குகள், செல்போன் திரையரங்குகள் என பல்வேறு வாசல்கள் இருக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரைப்பட விருதுகளின் மூலமாக, தகுதியானவர்கள் பாராட்டப்பட வேண்டும். திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக சிறந்த படங்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அதற்காக அந்த விழாக்கள் தான் திரையுலகத்தை கலையாகவும், வர்த்தகமாகவும் மேம்படுத்த உதவும். அத்தகைய விழாக்களை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசும் உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திரையுலகத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் முக்கிய உலகளாவிய மையமாக திகழத் தேவையான அனைத்தும் தென்னிந்தியாவில் இருக்கிறது.

திரைப்படங்கள் தொடங்கும்போதும் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் காண்பிக்கப்படுவது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று. இதே வேளையில் நான் உங்களிடத்தில் ஒரு கோரிக்கை வைக்க விரும்புவது, தற்போது குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் தாக்கம் இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகமாக இருக்கின்ற காரணத்தால், அதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களை பார்த்து வளர்கிறார்கள். எனவே அதனை மனதில் வைத்துக் கொண்டு, சமூகத்திற்குப் பயனளிக்கும் முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.