திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணியில் இருந்த பிரபல நடிகையை கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் கடத்தி ஒரு கும்பல் பலாத்காரம் செய்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்த சுனில்குமார் என்பவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பலாத்கார சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியது நடிகர் திலீப் என தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். 85 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திலீப் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் போலீசார் நீதிமன்றத்தில் அளித்த ஒரு மனுவுடன் விசாரணையின் போது கிடைத்த 6 ஆடியோ ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர். இவை அனைத்தும் திலீப் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் இருவர் மீதான பிடி இறுகியுள்ளது. இந்நிலையில் நடிகை பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஆடியோ வெளியானது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நடிகை காவ்யா மாதவனிடம் 11ம் தேதி விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.