திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்ட திலீப், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த திலீப், வழக்கின் சில சாட்சிகளை கலைத்ததாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக நடிகர் திலீப்பை குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை செய்தனர். அவரது செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது திலீப், சில முக்கிய நபர்களுடன் பேசி இருப்பதும், அவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து இருப்பதையும் கண்டு பிடித்தனர்.
இதில் சில அழைப்புகளும், தகவல் பரிமாற்றங்களும் அழிக்கப்பட்டிருந்தன. திலீப்பின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்தது யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் திலீப்பின் நண்பரும், சாப்ட்வேர் என்ஜினீயருமான ஒருவர் திலீப்பிற்கு உதவி செய்திருப்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அவரும் ஆலுவா போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
திலீப்பின் செல்போனில் அழிக்கப்பட்ட ஆதாரங்களில் நடிகை காவ்யா மாதவன் சிலருடன் பேசி இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே இந்த வழக்கு தொடர்பாக காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக கேரள குற்றப்பிரிவு போலீசார் நடிகை காவ்யா மாதவனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 11-ந்தேதி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கையால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.