நடுவழியில் சிக்னலை துண்டித்து ரெயிலில் பயணிகளை கத்தி முனையில் தாக்கி நகை, பணம் பறிப்பு

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பா காலா, குண்டக்கல், குத்தி வழியாக செகந்திராபாத்திற்கு தினமும் ஏழுமலையான் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணிக்கு திருப்பதியிலிருந்து ரெயில் பயணிகளுடன் புறப்பட்டது.

நள்ளிரவு 1 மணி அளவில் ரெயில் குத்தி மண்டலம் புரக்கபள்ளி ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென சிக்னல் கிடைக்காததால் டிரைவர் ரெயிலை மெதுவாக ஓட்டிச்சென்று நிறுத்தினார். நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது முகமூடி அணிந்த 20க்கும் மேற்பட்ட திருட்டு கும்பல் திடீரென ரெயிலில் ஏறினர்.

அவர்கள் ரெயிலில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பி கத்தி மற்றும் இரும்பு ராடுகளை காட்டி மிரட்டி பயணிகள் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை பறித்தனர்.

உயிருக்கு பயந்து பெண் பயணிகள் தாங்கள் அணிந்திருந்த செயின் வளையல் கம்மல் உள்ளிட்ட நகைகளை கழற்றிக் கொடுத்தனர். ஒரு சில பயணிகள் நகை பணத்தை தர மறுப்பு தெரிவித்தனர். அவர்களை சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்து நகை பணத்தை பறித்துக் கொண்டனர். கொள்ளையடித்த நகை, பணம் மற்றும் பொருட்களை மூட்டை கட்டி திருட்டு கும்பல் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து புரக்கபள்ளி ரெயில்வே போலீசார் மற்றும் குத்தி போலீசாருக்கு ரெயில் பயணிகள் தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பயணிகளிடம் இருந்து எவ்வளவு நகை பணம் கொள்ளை போனது என தெரியவில்லை. இது குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

உள்ளூரை சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? அல்லது வடமாநில கும்பல் கைவரிசை காட்டினரா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு கும்பல் ரெயில் சிக்னலை துண்டித்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை சம்பவம் நடந்த புரக்கபள்ளி ரெயில் நிலையம் அருகே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் ரெயில்வே சிக்னலை துண்டித்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. அப்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரெயில்வே சிக்னலை துண்டித்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்… இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் கிடையாது- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.