சின்னத்திரை ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட முகம் ஜீவிதாவுடையது! எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் அசர வைத்துவிடுவார். `மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் நந்தினியின் நிஜ வெர்ஷன்தான் ஜீவிதா. சொல்லப்போனால் ஏவிஎம் புரொடக்ஷனில் `மனதில் உறுதி வேண்டும்’ தொடர் மூலமாகத்தான் இவர் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.
`கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. சினிமா, சீரியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தவரை சமீபமாக சீரியல்களில் பார்க்க முடியவில்லை. என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடமே பேசினோம்.
சினிமாவும் சரி, சீரியலும் சரி இங்க ரெண்டு விஷயம் தான் பிரதானம். ஒன்று, அட்ஜெஸ்மென்ட்.. இன்னொன்னு, அரசியல். இது ரெண்டையும் கடந்து ஒரு நல்ல பிராஜெக்டில் நாம வர்றதே மிகப்பெரிய சாதனை. தொடர்ந்து சீரியல்களில் நடிச்சிருக்கேன். பாசிட்டிவ் ரோல், நெகட்டிவ் ரோல், போலீஸ் அதிகாரின்னு எல்லா கெட்டப்பிலும் என் நடிப்புத் திறமையை காட்டியிருக்கேன். ஆனாலும், எனக்கு ஏன் வாய்ப்புகள் வரலைன்னு உங்களுக்கு தெரியுமா? என்றவாறு பேசத் தொடங்கினார்.
நேரடியா மேனேஜர் அட்ஜெஸ்ட் பண்ணச் சொல்லி கேட்பாங்க. அவங்க சொல்ற ஆட்களை எல்லாம் அனுசரித்து போனா நல்ல கேரக்டரில், நல்ல சம்பளத்தில் நடிக்கலாம். எல்லா ஆர்ட்டிஸ்ட்டிற்கும் இதுதான் நடக்குதுன்னு சொல்லமாட்டேன். சில இடங்களில் இவங்கதான் இந்த ரோலில் நடிக்கணும்னு அவங்களுக்கு தெரிஞ்சவங்க, பிடிச்சவங்கன்னு தேர்ந்தெடுத்திடுவாங்க. சிலரிடம் நேரடியாக அட்ஜெஸ்ட் பண்ணச் சொல்லிக் கேட்பாங்க. நான் முகத்துக்கு நேரா முடியாதுன்னு சொல்லும்போது, எப்படி எனக்கு வாய்ப்பு கொடுப்பாங்க? என்னை ஓரம் கட்டிட்டு அவனுக்கு யார் தேவையோ அவங்களை தேர்ந்தெடுத்துப்பாங்க. ஓப்பனா சொல்லணும்னா சினிமாவிலும் சரி, சீரியலில் சரி இதை நான் சந்திச்சிருக்கேன். நான் முடியாதுன்னு சொன்னதால பல வாய்ப்புகளை இழந்திருக்கேன்.
நான் உண்மையா இருக்கிறேன்; என் வேலையைச் சரியா செய்றேன்; எந்தக் கேரக்டரில் நடிக்கணும்னாலும் உசுரைக் கொடுத்து நடிக்கிறேன். இதுக்கு மேல நான் என்ன செய்யணும்? நான் வெளிப்படையா உண்மையைப் பேசுறதனால என்னை திமிரு பிடிச்சவன்னு சொல்லியும் சிலர் ஒதுக்கியிருக்காங்க. எடுக்குறது தமிழ் சீரியல்… பார்க்கிறது தமிழ் மக்கள்… அதுல நடிக்கிறதுக்கு மட்டும் ஏன் வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டிட்டு வராங்க? அப்ப தமிழ்நாட்டிலேயே பொறந்து, தமிழ் பேசுற ஆர்ட்டிஸ்டிற்கு என்ன மரியாதை கொடுக்குறாங்க? இது எனக்காக மட்டும் பேசலைங்க… என்னை மாதிரி பல திறமையான தமிழ் நடிகர்கள் வாய்ப்பில்லாம கஷ்டப்படுறாங்க. அதை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்.
யாரோ ஒருத்தங்களை எங்கிருந்தோ கூட்டிட்டு வந்து அவங்களை வளர்த்துவிட்டு ஃபேமஸ் ஆக்கிவிடுறதுக்கு இங்கேயே வாய்ப்புக்காக காத்திருக்கிற ஒருத்தருக்கு கொடுக்கிறதுக்கு ஏன் தயங்குறீங்க..? நான் ஒருத்தி கேட்கிறதனால நிச்சயமா எதுவும் மாறப் போகிறது இல்லைன்னு எனக்கே நல்லா தெரியும். ஆனாலும், என் ஆதங்கத்தைப் பதிவு பண்றேன். இதெல்லாத்தையும் நல்ல இடத்துக்கு வந்துட்டு சொல்லணும்னு நினைச்சேன். இப்ப நீங்க கேட்டதால சொல்ல வேண்டியதாகிடுச்சு.
அட்ஜெஸ்மென்ட் பண்ண முடியாதுன்னு சொன்னதால இப்ப என் குடும்ப சூழலை சமாளிக்கிறதுக்காக வர்ற வாய்ப்பை ஏத்துக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் சொல்லணும்னா அம்மா கேரக்டரில் கூட நடிக்க ஓகே சொல்லிட்டேன்னா பார்த்துக்கோங்க. நான் அவங்க கேட்கிறதுக்கு சம்மதிக்கலைங்கிறதனால என்னை அவாய்ட் பண்றதுக்கு எவ்வளவு தூரம் முயற்சி பண்ண முடியுமோ அதெல்லாத்தையும் பண்ணுவாங்க. 30 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்தில் 15 ஆயிரம்தான் கொடுப்பாங்க. ஆனாலும் என்ன பண்றது. நம்மளுடைய சூழலுக்காக அதுக்கும் போய் நடிச்சிட்டு தான் வந்துட்டு இருக்கேன்!
எல்லா சீரியல் மேனேஜரையும், இயக்குனரையும், மேல் இடத்தில் இருக்கிறவங்களையும் நான் தப்பு சொல்லலை. ஆனா, பெரும்பாலான இடங்களில் இதுதான் வெளிப்படையா நடக்குது. சன்டிவியில் ‘திருமகள்’ சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிச்சிட்டு இருந்தேன். அந்த சீரியலில் காலைல 7 மணிக்கே ஷாட் வைச்சாங்க. கிளம்பிபோய் நடிச்சேன். நடிச்சு முடிச்சதும், `ரொம்ப டெடிகேடட்டா இருக்கீங்கன்னு’ இயக்குநர் பாராட்டினார். கடந்த ரெண்டு மாசமா என் டிராக் இல்லைன்னு அந்த சீரியலிலும் அடுத்து கூப்பிடவே இல்ல.
ஒவ்வொரு படத்துக்கும் நடிக்க போகும்போது இந்தப் படம் மூலமா அடுத்த வாய்ப்பு கிடைக்குமா, இந்த படத்தில் கொடுத்த சம்பளம் வாடகைக்கு ஆகுமா இப்படியான மனநிலையில் தான் ஓடிட்டு இருக்கேன். புருஷன், ஃபேமிலி, மீடியான்னு எந்த சப்போர்ட்டும் எனக்கு கிடையாது. இதுவரை இந்தப் பொண்ணை நான் தான் வளர்த்துவிட்டேன்னு ஒருத்தரும் சொல்லிடமுடியாது. சொந்த உழைப்பில் தான் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறேன்.
சீரியலிலும் லீட் ரோலில் நடிச்சிருக்கேன். சினிமாவிலும் கதாநாயகியா நடிச்சிருக்கேன். ஒவ்வொரு ஆடிஷன் போகும்போதும் கேஷூவலா, ‘நான் உங்களுக்காக இதை பண்றேன்… நீங்க எனக்கு என்ன பண்ணுவீங்கன்னு’ கேட்பாங்க. டீனேஜ் பசங்களுக்கு தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் வரும்னுலாம் கிடையாது. எந்த வயசா இருந்தாலும் அவங்க எதிர்பார்ப்பு இது ஒன்றாகத்தான் இருக்கு! இதெல்லாத்தையும் தாண்டி இந்த மாதிரியான எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாம எனக்கு வாய்ப்பளித்த, வாய்ப்பளிக்கும் இயக்குனர்களுக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.
நான் ரொம்ப போல்டான பொண்ணு.. அதனாலதான் என்னால இவங்களை சமாளிக்க முடியுது. என் இடத்தில் வேற யாராவது இருந்தால் நிச்சயம் அவங்க ரொம்ப ஒடுக்கப்பட்டிருப்பாங்க.. இந்த துறையே வேண்டாம்னுகூட முடிவெடுத்திருப்பாங்க. ‘யானை’, ‘காரி’,’கொடை’ போன்ற படங்களில் நடிச்சிருக்கேன். அந்தப் படங்களில் பெரிய அளவில் என் கேரக்டர் இல்லைன்னாலும் அது மூலமா அடுத்த வாய்ப்பு வந்திடாதா என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சமீபத்தில் வெளியான `மாறன்’ படத்தில் சின்ன வயசு தனுஷிற்கு அம்மாவாக நடிச்சிருந்தேன். நாளைக்கு விடியுற விடியல் நமக்கானதா இருக்காதா என்கிற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் கடந்துட்டு இருக்கேன்!’ என்றார்.
இன்னும் ஏதோ ஒரு இடத்தில் பெண்களுக்கான பாலியல் அத்துமீறல்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது! எப்போது பெண் மீதான இவர்களது பார்வை மாறப் போகிறது? நிரந்தர தீர்வை இவர்களுக்கு யார் பெற்றுத்தர போகிறீர்கள்? செலிபிரிட்டி என்கிற பெயருக்கு பின்னால் இவர்களுக்கு நடக்கின்ற சீண்டல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் எப்போது தீர்வு கிடைக்கும்.