நீலகிரியில் நீதிபதிகள் கள ஆய்வு: 'கடும் நடவடிக்கைக்கும் தயங்கவேண்டாம்' என வனத்துறைக்கு அறிவுரை

உதகை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தேவைப்படும் நடவடிக்கைகளை வனத்துறையினர் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் தடுப்புச் சுவரால் யானைகள் விழும் வீடியோ காட்சி வைரலானது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஸ்குமார் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தனர். வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா ஷாஹூ, ‘யானைகள் இயற்கை மரணம் மற்றும் ரயிலில் அடிப்பட்டு இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று அறிக்கை சமர்பித்தார்.

மேலும், குன்னூர் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கும் வீடியோ ஒன்றையும் நீதிபதிகள் பார்த்தனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் மலைப்பகுதியில் மது விற்பனை செய்ய ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி, மலைப்பகுதியில் மதுப் புழக்கத்தை கட்டுபடுத்த மாற்றுவழி ஏதேனும் உண்டா என்பது குறித்தும், வனவிலங்குகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் குன்னூர் வனப்பகுதி, உதகை, முதுமலை பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தனர்.

நீலகிரியில் நீதிபதிகள் குழு ஆய்வு: இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில், நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஸ்குமார், எம்.தண்டபாணி, ஆர்.பொங்கியப்பன், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்தனர். உதகை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தானியங்கி தண்ணீர் ஏடிஎம்களை பார்வையிட்டு, தண்ணீர் அருந்தி அதன் தரத்தை ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்திடம் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். உதகை அருகே வென்லாக் பள்ளத்தாக்குப் பகுதியை பார்வையிட்ட பின் மரங்களை நட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய நீதிபதிகள், ‘நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதால் அண்டை மாவட்டங்களின் நீர் தேவை பூர்த்தியாகிறது. இதில் நீலகிரியின் பங்கு மிகவும் முக்கியமானது’ என்றனர். மேலும், “சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால் அதற்கு தயங்க வேண்டாம்” என்று அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, “நீலகிரி மாவட்டத்தில் இயற்கை காடுகளை பாதுகாப்பதோடு, வனத்துறைக்கு வருவாய் ஈட்டும் வகையில் வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

பின்னர், முதுமலை புலிகள் காப்பகம் சென்றனர். அங்கு உண்ணிச்செடிகள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்றும் பணியை பார்வையிட்ட நீதிபதிகள், முதுமலை யானைகள் முகாமில் ‘ஸ்லைடு ஷோ’ பார்த்தனர். பின்னர் கார்குடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் களை எடுக்கும் பணியை பார்வையிட்டனர். நாளை குன்னூர் பகுதியில் யானைகள் வழிதடத்தை பார்வையிடும் நீதிபதிகள் பின்னர் வால்பாறை புறப்பட்டு செல்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.