வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-‘ஜனநாயக மதிப்பீடு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மதிக்க வேண்டும்’ என, நாட்டில் உள்ள அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தர விடுமாறு, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில், சித்தி மாவட்டத்தை சேர்ந்த நாடக கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, உள்ளூர் பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரி சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டார். சமூக ஆர்வலர்களுடன் சேர்த்து பத்திரிகையாளரையும் கைது செய்த போலீசார் அவர்களின் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் விசாரணை நடத்தினர். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியது.
இதே போல, ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில், ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் லோக்நாத் டாலெய் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கட்டிலுடன் சேர்த்து போலீசார் விலங்கிட்டனர். இந்த சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக, ‘தி எடிட்டர்ஸ் கில்டு’ எனப்படும் இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டு உள்ள அறிக்கை:மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடந்த அத்துமீறல்கள் கவலை அளிக்கின்றன.
ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மதிக்குமாறு அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிடவேண்டும்.மாநில அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement