பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்த நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சேபாஸ் செரீப் வலியுறுத்தியுள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று முற்பகல் பத்தரை மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.
அவையில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஷா மகமூது குரேசி, அரசியலமைப்பின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிக்கும், ஆட்சியைத் தற்காத்துக்கொள்ள அரசுக்கும் உரிமை உள்ளதாகத் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாகவும், இருந்தாலும் அதை மதிப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சபாநாயகர் ஆசாத் கெய்சர் அவையை ஒரு மணி வரை ஒத்தி வைத்தார்.
இதையடுத்துச் சட்ட வல்லுநர்களுடன் பிரதமர் இம்ரான்கான் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் அவை மீண்டும் கூட்டப்படாததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வாக்கெடுப்புக்காக அவையைக் கூட்ட வேண்டும் என சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சேபாஸ் செரீப் வலியுறுத்தினார்.