இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஓட்டெடுப்பை நடத்தாமல் இம்ரான் கான் அரசு தொடர்ந்து பல நாடகங்களை நடத்தியது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த, 3ம் தேதி, பார்லிமென்டில் இதன் மீது ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது.கூட்டணிக் கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் சிலர் இம்ரான் கானுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர். அதனால் பார்லிமென்டில் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார்.இந்நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்து, அந்த நாட்டு பார்லிமென்டின் துணை சபாநாயகர்காசிம் கான் சுரி உத்தரவிட்டார். அடுத்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி பார்லிமென்டை முடக்கி உத்தரவிட்டார்.இந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், ‘துணை சபாநாயகர் மற்றும்அதிபரின் உத்தரவுகள் செல்லாது’ என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. மேலும் ‘பார்லிமென்டில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது, 9ம் தேதி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என, தீர்ப்பில் கூறப்பட்டது.
அதன்படி, பார்லிமென்ட், இந்திய நேரப்படி நேற்று காலை 11:00 மணிக்கு மீண்டும் கூடியது. ”அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதி குறித்து விவாதிக்க வேண்டும்,” என, சபாநாயகர் ஆசாத் காசிர் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.’உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் கடும் அமளி ஏற்பட்டது. அதையடுத்து மதியம் 1:00 மணி வரை பார்லிமென்டை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.ஆனால், குறிப்பிட்டபடி மதியம் மீண்டும் பார்லிமென்ட் கூடவில்லை.
நான்கு மணி நேரத்துக்குப்பின் பார்லிமென்ட் மீண்டும் கூடி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடந்தது. பிறகு ரம்ஜான் நோன்பு திறப்புக்காக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், முறையாக விண்ணப்பிக்கப்படவில்லை. அதனால், சீராய்வு மனு நாளை தாக்கல் செய்யப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.நேற்று இரவில் பார்லிமென்ட் மீண்டும் கூடியது. உடனடியாக ஓட்டெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், ஆளும் தரப்பு அதை ஏற்கவில்லை. இதனால் கடும் அமளி ஏற்பட்டது.
அதையடுத்து, இரவு 10:00 மணி வரை பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டது.பார்லிமென்டில் இவ்வளவு அமளி, துமளி நடந்தபோதும், இம்ரான் கான் பார்லிமென்டுக்கு வரவில்லை. அரசு தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமுத் குரேஷியே சபைக்கு வந்திருந்தார்.இதற்கிடையே அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். இவ்வாறு தொடர்ந்து ஓட்டெடுப்பை நடத்தாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.அதே நேரத்தில் ‘ஓட்டெடுப்பை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும்’ என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன.பரபரப்பான இந்த அரசியல் காட்சிகளுக்கு இடையே, தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட முக்கிய நகரங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் நள்ளிரவைத் தாண்டியும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த அரசியல் நாடகங்களில் முடிவு ஏதும் ஏற்படாவிட்டால், ராணுவம் தலையிடும் என்றும் கூறப்படுகிறது.’இந்தியாவுக்கு போங்க!’அரசியல் குழப்பங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே, ‘டிவி’ வாயிலாக பிரதமர் இம்ரான் கான் பேசினார்.
அப்போது, ‘இந்தியா சுயமரியாதையுடன் இருக்கிறது. அதிகாரமிக்க நாடுகள் கூட, அந்நாட்டிற்கு எதிராக பேச மறுக்கின்றன’ என, இம்ரான் கான் குறிப்பிட்டார்.இது குறித்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் கூறியதாவது:ஆட்சி, அதிகாரம் பறிபோவதால் இம்ரான் கான் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் கண்டபடி பேசி வருகிறார். உங்களுக்கு இந்தியா மீது அவ்வளவு பாசம் இருந்தால், பேசாமல் அங்கேயே போய்விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.