அசாமில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 சிறுமிகளை வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ளது அபயக்குடி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். இதையடுத்து, அந்த சிறுமிகளின் உடல்களை கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், அவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் அசாமில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. எஸ்ஐடி நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கோக்ராஜார் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களையும் குற்றவாளி என கடந்த 6-ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி சதுர்வேதி, குற்றவாளிகள் மூவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM