ஆன்லைனில் உணவை வரவழைத்தால் அதில் ஆபத்தும் சேர்ந்து வருமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்று.
பெரிய ஓட்டல்கள் என்றாலும், சிறிய ஓட்டல்கள் என்றாலும், எங்கு சாப்பிட்டாலும் நாம் விழிப்புணர்வுடன் சாப்பிட வேண்டும் என்பதற்காக இந்த செய்தி தொகுப்பு. சர்வதேச அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 43,600 ஸ்டோர்களை ‘சப்வே இந்தியா’ நடத்தி வருகிறது.
இந்தியாவில் குயிக் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் பிரிவில் 6 சதவீத சந்தையை ‘சப்வே இந்தியா’ வைத்திருக்கிறது. பீட்ஸாஹட், டொமோனோ பீட்ஸா, பர்கர் கிங், மெக்டொனால்ட், ஸ்டார்ட் பக்ஸ் உள்ளிட்டவை குயிக் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் பிரிவில் செயல்பட்டுவரும் முக்கியமான நிறுவனங்கள்.
இங்கெல்லாம் சுத்தமாக, சுகாதாரமாக சமைப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் விளைவைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த கிஷோர் என்பவர், ஆன்லைன் மூலம் சப்வே ரெஸ்டாரன்டில், பன்னீர் டிக்கா டார்ட்டிலா ஆர்டர் செயதுள்ளார். இவர் சைவம் மட்டும் சாப்பிடுபவர் என்பதாலும், சப்வே ரெஸ்டாரன்டில் சுத்தமாக காய்கறிகளை பயன்படுத்துவார்கள் என்ற எண்ணத்தில், இந்த ரெஸ்ரான்டில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கமாம்.
கடந்த 7-ம் தேதி மதியம் பன்னீர் டிக்கா டார்ட்டிலா இவர், ஆர்டர் செயதுள்ளார். இதன்விலை 500 ரூபாய். கூப்பன் மூலம் ஆர்டர் செய்ததால் 350 ரூபாய் வந்துள்ளது. பார்சல் வீட்டிற்கு வந்தவுடன் வழக்கமாக அனைவரும் சாப்பிடுவது போல டிவியை பார்த்துக்கொண்டே பார்சலை பிரித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது, உணவு பண்டத்தில் இருந்து ஏதே ஒன்று நகர்ந்து வருவதை எதேச்சையாக பார்த்துவிட்டு அதனை கீழே வைத்துள்ளார்.
அப்போது, பச்சை நிறத்தில் எட்டுக்கால் பூச்சி வந்துள்ளது. இதனால் பயந்து போன அவர் அந்த ரோலை பிரித்தபோது உள்ளே இரண்டு் மூன்று எட்டுக்கால் பூச்சி வெளி வரத்தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது, புட்பாய்சன் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்து, வீடியோ எடுத்து சப்வே ரெஸ்ரான்ட் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். முதலில் சரியான பதிலாளிக்காத நிர்வாகிகள் மீடியாக்களுக்கு தெரியப்படுத்த போகிறேன் என்று கிஷோர் கூறியதும், மேனேஜர் விஜய் என்பவர் இதனை பெரிதுப்படுத்த வேண்டாம். ஏற்கனவே, இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபோது இந்தளவிற்கு சென்றதில்லை.
நாம் தனியாக சந்தித்து பிரச்சனை பேசி சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து புதிய தலைமுறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, சப்வே மேனேஜரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, நடந்த நிகழ்வுக்கு சரியான விளக்கம் கொடுக்க முன்வராமல் நமது செய்தியாளர் குழுவினரை தனியாக சந்திக்க அவர் அழைத்துள்ளார்.
எப்போது சந்தித்தாலும் நீங்கள் பேட்டி கொடுப்பதாக இருந்தால், சந்திக்கலாம் என்று கூறிய பிறகு அவர்கள் தரப்பில் யாரும் விளக்கமளி்க்க முன்வரவில்லை. நாம் எங்கு உணவு உட்கொண்டாலும் டிவி பார்க்கமல் உணவில் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM