புதிய குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதா 2022: எதிர்ப்பு ஏன்?

புதிய குடியுரிமைச் சட்டம் போலவே, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கடந்த 5ம் தேதி நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை கொண்டு வந்தார்.

இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டார்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே இந்த மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா என்றால் என்ன?

கைது செய்யப்படுபவர்களின் அங்க அடையாளங்களை பதிவு செய்யும் சட்டம் வெள்ளையர் ஆட்சியில் 1920ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது ஒன்றிய அரசு, புதிதாக குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. பழைய சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்களின்
கைவிரல் ரேகைகள்
, கால் விரல் ரேகைகள் ஆகியவற்றை மட்டுமே பதிவு செய்து வைக்க முடியும். அதுவும் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் அல்ல. குறிப்பிட்ட தண்டனை பெற்றவர்களிடம் மட்டுமே. ஆனால் இப்போது நிறைவேற்றப்பட்டு இருக்கும், புதிய மசோதாவின்படி, காவல்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. என எந்த அமைப்பால் கைது செய்யப்பட்டாலும் குற்றவாளிகளின் கைவிரல் மற்றும் கால் விரல் ரேகைகளை பதிவு செய்யலாம்.

கூடுதல் அதிகாரம்

அது மட்டுமல்ல, இந்த புதிய சட்டத்தின்படி குற்றவாளிகளின் கை மற்றும் கால் விரல் ரேகைகள் மட்டுலல்ல ரத்தம், எச்சில், விந்து, வியர்வை, தலைமுடி, விரல் நக துண்டுகள், டி.என்.ஏ. ஆகியவற்றை சேகரித்து வைக்க முடியும். தவிர, இதர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் முடிவுகளையும் சேகரித்து வைக்க காவல் அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

யார், யாரிடம் சேகரிக்கலாம்?

இப்போது, நடைமுறையில் உள்ள பழைய சட்டத்தின்படி, ஒரு ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களிடம் மட்டுமே கை – கால் விரல் ரேகை மாதிரிகளை சேகரிக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தில் அந்த வரையறையை எல்லாம் கிடையாது.
தடுப்புக் காவல்
சட்டத்தின் கீழ் கைதானவர்களிடம் இந்த மாதிரிகளை சேகரிக்கலாம். அது மட்டுமல்ல ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலே, மாதிரிகளை சேகரிக்கலாம் என்கிறது புதிய மசோதா. சம்மந்தப்பட்ட நபர், இந்த மாதிரிகளை அளிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக மாதிரிகளை சேகரிக்கலாம் என்றும் இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

விதிவிலக்கு.. நம்பத்தகுந்தது அல்ல!

பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கும், ஏழு ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை பெற்றவர்கள், இந்த மாதிரிகளை அளிக்க மறுக்கலாம்’ என புதிய மசோதா விதிவிலக்கு அளித்துள்ளது. ஆனால், சமூக ஆர்வலர்கள் பலரும், “இது நடைமுறையில் சாத்தியம் இல்லை” என்கிறார்கள்.

எவ்வளவு காலம்?

சேகரிக்கப்படும் உயிரியல் மாதிரிகள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை, பாதுகாக்கப்படும். இந்த மாதிரிகள் சம்பந்தப்பட்ட நபரின் சட்ட நடவடிக்கைகள் முழுதுமாக நிறைவடைந்த பிறகு அழிக்கப்படும்’ என்கிறது இந்த மசோதா.

எதிர்ப்பு

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ‘எதிர்க்காலத்தில் வலுக்கட்டாயமாக போதைப்பொருள் பகுப்பாய்வு, மூளை பரிசோதனை வரை கொண்டு செல்லும் முயற்சி இது’ என்றார்கள். அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஏன்?

இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள
வழக்கறிஞர்
ராஜேந்திரன், “2010ம் வருடம், கர்நாடக அரசு – செல்வி வழக்கில், தனிநபரின் அனுமதி இல்லாமலோ அவருக்கு தெரியாமலோ அவரது மாதிரிகளை எடுக்கக்கூடாது. இது அரசியலமைப்பு பிரிவு 20-க்கு எதிரானது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆகவேதான் அரசியலமைப்பு எதிரான மனித உரிமைக்கு எதிரான இந்த புதிய மசோதாவை எதிர்க்கிறோம்” என்றார்.

சமூக ஆர்வலர் திருப்பதி முத்துகிருஷ்ணன், “இந்த மசோதா குற்றவாளிகளுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியே என குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, தேசிய குற்ற ஆவண காப்பகம் தேசிய அளவிலல் ஒரு விசயத்தை செய்து வருகிறது. அதாவது பொதுமக்கள் அனைவரின் விபரங்களை முழுமையாக சேகரிக்கும் முயற்சியில் இருக்கிறது. ஆகவே தற்போதைய புதிய மசோதா, பொதுமக்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்.

“குடியுரிமை சட்டத்துக்கும் எதிர்ப்பு வந்தது பிறகு அடங்கிவிட்டது. அதே போல இச்சட்டத்துக்கான எதிர்ப்புகளும் அடங்கிவிடும். குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்றங்களை நிரூபிக்கவும் கொண்டு வரப்படும் இச்சட்டத்தை எதிர்ப்பவர்களின் காரணம் புரியவில்லை” என்கிறார்கள் புதிய சட்டத்தை ஆதரிப்பவர்கள்.

பொது மக்கள் அனைவருக்குமான சட்டமாக ஆகிவிடுமோ என்கிற பயம்கூட எதிர்ப்புக்கு காரணமாக இருக்கலாம்.

விமர்சகர் – டிவி சோமு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.