பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா பெங்களூருவில் கரக திருவிழா குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
11 நாட்கள் நடைபெறும் புகழ்பெற்ற பெங்களூரு கரக திருவிழாவுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரக ஊர்வலம் செல்லும் பாதையில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை சீரமைக்கும் பணிகள், அந்த பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்தல் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிவறை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்துள்ளனர். எந்த நிலையிலும் அந்த நீர் வெளியே வராத வண்ணம் சரிசெய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. வாகன நிறுத்தத்திற்கும் இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.
பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் கூறும்போது, ‘பெங்களூரு கரக திருவிழா இன்று (நேற்று) இரவு முதல் தொடங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் வரலாறு கொண்ட கரக திருவிழா இன்றும் தனது நிலையை இழக்கவில்லை’ என்றார்.
அதைத்தொடர்ந்து உதய் கருடாச்சார் எம்.எல்.ஏ., ‘பெங்களூரு கரக விழாவில் அனைத்து சாதி-மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த முறை சிலர் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ள கூடாது. மத நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று சிலரிடம் கூறியுள்ளேன்’ என்றார்.
இந்த கரக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று(சனிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள், 13-ந் தேதி ஆராதனை தீபங்கள், 14-ந் தேதி இரவு 10 மணிக்கு பச்சை கரக நிகழ்ச்சி நடக்கிறது. 15-ந் தேதி பொங்கல் வைத்தல் மற்றும் புராதன சேவைகள் நடக்கின்றன. 16-ந் தேதி கரக சக்தியோத்சவ ஊர்வலம், 17-ந் தேதி புராதன சேவை, 18-ந் தேதி வசந்தோத்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த பேட்டியின்போது, கரக விழா குழுவினர், தர்கா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.