இம்பால்: மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்காக விலை நிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். மணிப்பூர் யாய்திபி லோகன் பகுதியில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்காக விலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுப்புற கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கற்களை வீசி தாக்கினர். காவல்துறையின் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை காவலர்கள் கலைத்தனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காவல்துறை சோதனை சாவடிக்கும், கிராம மக்கள் தீ வைத்ததால் பதற்றம் பல மடங்கு அதிகரித்தது. இதையடுத்து யாய்திபி லோகன் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.