விஜயநகரா, : முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உட்பட 61 பிரமுகர்களுக்கு மிரட்டல் விடுத்து மொட்டை கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷிவமொகா மாவட்டம், பத்ராவதியில் இருந்து மத்திய சாஹித்ய அகாடமி விருது பெற்ற இலக்கியவாதி வீரபத்ரப்பாவின், விஜயநகரா மாவட்டத்தின் கொட்டூரில் உள்ள வீட்டுக்கு தபாலில் மொட்டை கடிதம் ஒன்று வந்தது.அதை பிரித்து பார்த்த போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் குறிப்பிட்டிருந்தது.
கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:வீரபத்ரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி மற்றும் 61 பிரமுகர்களே, நீங்கள் நம் நாட்டின் உணவை சாப்பிட்டு, நாட்டின் காற்றை சுவாசித்து, தேச துரோக செயலில் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் சர்வநாசம் ஆவது உறுதி.உங்களுக்கு சாவு நெருங்கிவிட்டது. அது எந்த ரூபத்திலும் வரலாம். அதற்காக தயாராக இருங்கள். இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, அதை சரிப்படுத்துங்கள் என்று 60க்கும் அதிகமான இலக்கியவாதிகள் சமீபத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியிருந்தனர்.இதன் அடிப்படையில் இந்த மிரட்டல் கடிதம் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.மிரட்டல் வந்துள்ள அனைத்து பிரமுகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
Advertisement