CM Stalin’s speech highlights in Kerala CPM meeting: கேரள மாநில கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் மத்திய – மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையை மலையாளத்தில் தொடங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை,
மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அவர் எனக்கு வழிகாட்டும் முதல்வராக திகழ்கிறார். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஒரு மாநிலத்தில் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பினராயி விஜயன் இருக்கிறார். ஒரு கையில் போராட்ட குணம், ஒரு கையில் தொலைநோக்கு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் பினராயி விஜயன். தமிழ்நாடு முதல்வரான நானும், கேரள முதல்வரும் தலையாட்டி பொம்மையாக இருந்தால் பிரச்னை இருந்திருக்காது. பெரும்பான்மையோடு வென்ற அரசு இருக்கும்போது ஆளுநரை வைத்து ஆட்சியை நடத்த முயற்சிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து மசோதாக்களை கிடப்பில் போடுகின்றனர். ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல. 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்றுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை.
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின்; சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ஹைலைட்ஸ்
மாநிலங்களின் உரிமைக்காக போராட நாம் தயாராக இருக்க வேண்டும். மாநில உரிமையை காத்திட மாநில முதல்வர்கள் குழுவை அமைத்திட வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது. ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே கட்சி என மாற்ற பாஜக முயல்கிறது.
மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி நிதி வர வேண்டியுள்ளது. மாநில வளர்ச்சிக்கான திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக் குழுக்களை மத்திய அரசு கலைத்து விட்டது. நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி பாஜக சட்டங்களை இயற்றுகிறது.
இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.