உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும்படி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியிடம் கேட்டதாகவும், ஆனால் இது குறித்து அவர் எங்களுடன் பேசவில்லை எனவும், ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றார். மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இக்கட்சியின் 97 சதவீத வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர். இதே போல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, 110-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமையுங்கள். முதல்வராக்குகிறோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடம் தெளிவாக கூறினோம். ஆனால், அவர் எங்களுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. கன்ஷிராமால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டிருந்தாலும், உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்களின் குரலை எடுத்து கூறியதற்காக அவர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். ஆனால், அதற்காக போராட மாட்டேன் என
மாயாவதி
கூறுகிறார். பாஜக நுழைவதற்கு மாயாவதி வழிவிட்டு விட்டார். இதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை, பெகாசஸ் ஆகியவையே காரணம்.
மக்கள் பேசாவிட்டால், அரசியல் அமைப்புகள் கட்டுப்படுத்தப்படுவது தொடரும். அரசியல் சாசனம் பின்பற்றப்படாது. அரசியல் சாசனம் செயல்படாமல் போனால், தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், வேலையில்லாதோர், சிறு விவசாயிகள் மற்றும் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அரசியல் சாசனம் என்பது மிகப்பெரிய ஆயுதம். ஆனால் அமைப்புகள் இல்லாமல் முழுமை பெறுவது இல்லை. அதனை ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது. நான், பணம் ஏதும் வாங்கியிருந்தால் என்னால் அரசுக்கு எதிராக பேசியிருக்க முடியாது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அரசியல்வாதிகள் பிடியில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.