மாயாவதி கதை ஓவர்.. "பழைய பாணி"யை கையில் எடுக்கும் ராகுல் காந்தி.. உயிர் பெறுமா காங்.?

உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் அத்தியாயம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இனிமேலும் அவரால் தலையெடுக்க முடியும் என்று தோன்றவில்லை. இந்த நிலையில் 80களில் காங்கிரஸுக்குக் கை கொடுத்த “ஜாதி பார்முலா”வைக் கையில் எடுக்கலாமா என்ற திட்டத்தில் உள்ளாராம்
ராகுல் காந்தி
.

உத்தரப் பிரதேச சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில்
காங்கிரஸ்
மிக மோசமாக தோல்வியடைந்தது. கடந்த 2017 சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை காங்கிரஸின் நிலைமை மோசமாகி விட்டது. இதையடுத்து காங்கிரஸை எப்படி தேற்றுவது என்ற யோசனையில் கட்சி மேலிடம் உள்ளது.

இதற்கிடையே, ராகுல் காந்தி மனதில் ஒரு திட்டம் ஓடிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது உத்தரப் பிரதேச தலித் வாக்குகளை மொத்தமாக கவரும் யோசனையில் இருக்கிறாராம் ராகுல் காந்தி. இதுதவிர மாயாவதியைப் போலவே பிராமணர் சமூக வாக்குகளையும் காங்கிரஸ் பக்கம் திருப்பும் திட்டமும் ராகுல் காந்தியிடம் உள்ளதாம். அதாவது தலித் – பிராமணர் – முஸ்லீம்.. இந்த முத்தரப்பு வாக்கு வங்கியை மீண்டும் கட்டி எழுப்ப ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளாராம்.

இந்த நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி கூறுகையில், உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில்,
பகுஜன் சமாஜ்
கட்சியையும் சேர்க்க திட்டமிட்டிருந்தோம். இதுதொடர்பாக அவர்களையும் தொடர்பு கொண்டிருந்தோம். ஆனால் மாயாவதியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
மாயாவதி
இந்த தேர்தலை முறையாக சந்திக்கவில்லை. அவர் எங்களுக்குப் பதிலளிக்கவும் மறுத்து விட்டார். உத்தரப் பிரதேச தலித் மக்களுக்காக கன்ஷிராம் குரல் கொடுத்தார், கடைசி வரை போராடிநார். அது காங்கிரஸைப் பாதித்தது என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அவர் போல மாயாவதி போராடவில்லை, போட்டியிடவில்லை. அவரைச் சுற்றி சிபிஐ, அமலாக்கப் பிரிவு, பெகாசஸ் என்ற அபாயங்கள் இருப்பதையும் நாங்கள் மறக்கவில்லை என்றார் ராகுல் காந்தி.

உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட மோசமான தோல்வியைச் சந்தித்து பகுஜன் சமாஜ் கட்சி. ஒரு சீட்டில் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி ஜெயித்தது. மாயாவதியின் வாக்கு வங்கி சிதறிப் போய் விட்டதையே இது காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை விட முக்கியமாக உருவாக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி வெகுவாக விலகிப் போய் விட்டதையும் வாக்காளர்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான், மாயாவதியை நம்பி இருந்த தலித் வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்ப ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடவே பிராமணர்கள், முஸ்லீம்களையும் இணைத்து 80களில் செய்த அதே மாஜிக்கை மீண்டும் நிகழ்த்தவும் ராகுல் காந்தி விரும்புகிறாராம். தலித்துகளைக் கவரும் வகையிலும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். இந்த நாட்டில் விலங்குகளைக் கூட எளிதில் தொட முடியும். ஆனால் மனிதர்களைத்தான் தொட முடியாது. ஜாதி கொடூரங்கள் நாட்டை விட்டு அழிய வேண்டும் என்று தலித் மக்களைக் குறி வைத்து பேசியுள்ளார் ராகுல் காந்தி.

உத்தரப் பிரதேச முதல்வராக நான்கு முறை இருந்துள்ளார் மாயாவதி. ஆனால் இந்த தேர்தலில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் கடைசி வரை ஆக்டிவாகவே இல்லை மாயாவதி. தேர்தல் பிரசாரத்தையும் கடனுக்குத்தான் நடத்தினார். அவர் ஏதாவது செய்வார் என்று தலித் வாக்காளர்கள் நம்பி இருந்து ஏமாந்ததுதான் மிச்சம். பாஜகவின் மறைமுக அழுத்தமே மாயாவதியின் மெளனத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உ.பி. அரசியலிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டு விட்டார் மாயாவதி. அவரை நம்பியிருந்த தலித் வாக்கு வங்கியைக் கவரும் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்பினால் நிச்சயம் காங்கிரஸுக்கு பெரும் வளர்ச்சி உண்டாகும் என்று அதன் தலைவர்கள் நம்புகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ராகுல் திட்டம் வெல்லுமா என்பதை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.