CSK consecutive defeats fans reactions: சென்னை அணி தொடர்ந்து 4-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த வருத்ததுடன் உள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகளின் 14 சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை புதிதாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்து படைத்து வருகின்றன. நாடு முழுவதும் 10 அணிகளும் இருந்தாலும், சென்னை அணிக்கான மவுசு தனி தான். சென்னை அணிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முழு முதற்காரணம் தல தோனி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்று விட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ஐபிஎல் போட்டிகளை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக தோனி கேப்டன் பதவியை துறந்து, ஐடேஜாவிடம் அதைக் கொடுத்தார். சென்னை அணி புது கேப்டன் ஐடேஜா தலைமையில் களமிறங்கினாலும், தோனி இருப்பதால் சென்னை எப்போதும் போல் சிறப்பாக விளையாடும் என எல்லோரும் கூறி வந்தனர்.
ஆனால், இந்த ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாகவே அமைந்துள்ளது. இதுவரை விளையாடி 4 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த ஐபிஎல்லின் ஆரம்ப போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை அணி கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்ததாக இரண்டாவது போட்டியில் புது அணியான லக்னோ அணியிடம் தோற்றது. மூன்றாவது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோற்றது.
இதையும் படியுங்கள்: CSK vs SRH Highlights: சி.எஸ்.கே தொடர்ந்து 4-வது தோல்வி; முதல் வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத்
தொடர்ந்து 3 தோல்விகள் அடைந்த நிலையில், சென்னை அணிக்கு 5 நாட்கள் போட்டி இல்லாமல் தயாராவதற்கு நேரம் கிடைத்தது. இதனால் சென்னை இன்று வெற்றிப் பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இன்றும் தோல்வியை தழுவியுள்ளது. அதுவும் இந்த ஐபிஎல்லில் இதுவரை வெற்றி பெறாத சன்ரைஸர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.
சிஎஸ்கேவின் தொடர் தோல்வியைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் தோல்விகளால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சிக்கலாகி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
சில ரசிகர்கள் சிஎஸ்கே முதலில் தோற்றாலும், இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.