நாகர்கோவிலில் நேற்று முன்தினம் பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு ஆரல்வாய்மொழியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட பாஜக பிரச்சாரப் பிரிவு தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தின் போது ஜெயபிரகாஷ், முதல்வர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக மாவட்டப் பொருளாளர் கேட்சன் வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஜெயபிரகாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், நேற்று அதிகாலை காவல்துறையினர் இரணியலில் உள்ள ஜெயபிரகாஷின் வீட்டிற்கு சென்று, அவரைக் கைது செய்ய முயன்றனர்.
இந்த தகவல் அறிந்த உடனடியாக பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் ஜெயபிரகாஷின் வீட்டிற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், ஜெயபிரகாஷை கைது செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கொண்டு சென்றனர். அப்போது பாஜகவினர் அங்கும் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.