முல்பாகல் : கோலாரின் முல்பாகலில் ஸ்ரீ ராமர் தேர் பவனி வந்த போது, மர்ம நபர்கள் கற்கள் வீசி, பெட்ரோல் பாங்க் சூறையாடி, பைக்கிற்கு தீ வைத்தனர். போலீசார் தடியடி நடத்தி சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவியது.கோலார் மாவட்டம், முல்பாகலின் சிவகேசவா நகரில் இருந்து, ஆவனி ராமலிங்கேஸ்வரா கோவிலுக்கு நேற்றிரவு ஸ்ரீ ராமர் தேர் பவனி நடந்தது. 16 அடி உயர ஸ்ரீ ராமரின் உருவ சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரில் நகர்வலம் கொண்டு வந்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பியவாறே வந்தனர். ஜஹாங்கிர் மொஹல்லா என்ற பகுதியில் வந்த போது, மர்ம நபர்கள் பக்தர்கள் மீது கற்கள் வீசினர். பக்தர்களின் கோஷம் அதிகமானது.சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. பெட்ரோல் பங்க் சூறையாடப்பட்டது.தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், தடியடி நடத்தினர்.ஊர்வலத்தில் இருந்தவர்கள் நாலாபுறமும் ஓடினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தேறியது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை துவக்கினர்.முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement