பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கடந்த மாதம் பஜ்ரங் தள நிர்வாகி ஹர்ஷா மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தலைமையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் முஸ்லிம் அமைப்பினரை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், ‘‘முஸ்லிம் குண்டர்களே ஹர்ஷாவை கொலை செய்துள்ளனர்” என குற்றம் சாட்டினார். இந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதுகுறித்து ஷிமோகாவை சேர்ந்த ரியாஸ் அகமது, அமைச்சர் ஈஸ்வரப்பா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பேசியதாலேயே வன்முறை ஏற்பட்டது. பாஜக கவுன்சிலர் சென்னபசப்பாவும் வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். எனவே இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ஷிமோகா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘ஹர்ஷா கொலைக்கு பின் வகுப்புவாத வெறுப்பு பேச்சு, ஆத்திரமூட்டும் அறிக்கை ஆகியவற்றின் மூலம் ஈஸ்வரப்பா, சென்னபசப்பா ஆகியோர் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். எனவே போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.